வெள்ளி, 2 செப்டம்பர், 2016

இயற்க்கை சுபரும் இலக்கின சுபரும்

அனைவருக்கும் எனது வணக்கம்.
பலர் லக்கின சுபரையும் இயற்கை சுபரையும் அதேபோல லக்கின பாவரையும் இயற்கை பாவரையும் போட்டு குழப்பிக்கொள்கிறார்கள்... என்னிடம் கேட்கிறார்கள். நானும் நேரமுள்ளபோதேல்லாம் பதில் அளித்து வருகின்றேன். இதுபற்றி ஒரு தெளிவான விளக்க கட்டுரையினை தற்போது பார்ப்போம்...
லக்கின சுபர் என்பது ஒரு லக்கினத்திற்கு ஒரு கிரகம் கேந்திரங்களுக்கோ அல்லது திரிகோணங்களுக்கோ அதிபதியாக வருவதாகும். சில சந்தர்ப்பங்களில் ஒரே கிரகம் ஒரு கேந்திரத்திற்கும் ஒரு திரிகோணத்திற்கும் அதிபதியாகி "லக்கின யோகி" எனும் அதிக சுபத்துவம் வாய்ந்த கிரகமாக இருக்கும். உதாரணமாக கடக லக்கினத்திற்கு செவ்வாய் பகவானானவர் திரிகோணமான 5ம் வீட்டிற்கும் கேந்திரமான 10ம் வீட்டிற்கும் அதிபதியாக வருவார். எனவே கடக லக்கினத்திற்கு செவ்வாய் "லக்கின யோகி" என்ற நிலையினை பெறுவார்.
லக்கின பாவி என்போர் லக்கினப்படி 3 / 6 / 8 /12ம் வீடுகளுக்கு அதிபதியாக வரும் கிரகங்களாகும். இவை தீய பலன்களையே செய்யும் என்ற பொதுவான விதி இருந்தாலும் அவரவர் ஜாதக அடிப்படியில் மிகவும் அற்புத பலன்களையும் தரவல்லவை... அதனை இங்கு பதிந்து உங்களை குழப்ப விரும்பாமையால் அதுபற்றி விரிவாக இன்னொரு நாளில் பார்ப்போம்...
இயற்கை சுபர் என்போர் குரு பகவான், சுக்கிரன் பகவான், தனித்த புதபகவான்/ சுவருடன் இணைந்த புதபகவான், வளர்பிறை சந்திர பகவான்.
இயற்கை பாவர் என்போர் சனிபகவான், செவ்வாய் பகவான், பாவருடன் இணைந்த புதபகவான், தேய்பிறை சந்திர பகவான்.
( குறிப்பு - துல்லியமாக திதி அடிப்படையில் முடிவு செய்யப்படின் வளர்பிறை அஷ்டமி முதல், தேய்பிறை சப்தமி வரை சுபசந்திரன். இதுவே தேய்பிறை அஷ்டமி முதல், வளர்பிறை சப்தமி வரை அசுபசந்திரன்.
அதாவது வளர்பிறை சந்திரனின் எப்போதும் சுபராக இருப்பதில்லை. அதுபோல தேய்பிறை சந்திரனின் எப்போதும் அசுபராக இருப்பதில்லை. )

தற்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரக்கூடும். அதாவது ஒரு கிரகம் கேந்திரஸ்தானத்திற்கும்/ திரிகோணஸ்தானத்திற்கும் ஒரு அசுப(மறைவு) ஸ்தானத்திற்கும் அதிபதியாக வந்தால் அந்த கிரகம் லக்கின சுபரா அல்லது லக்கின பாவியா என... அந்த கிரகத்தின் மூலத்திரிகோண ஸ்தானம் எதுவோ; அது அந்த லக்கினத்திற்கு கேந்திர/திரிகோண ஸ்தானமாக வந்தால் அந்த கிரகம் லக்கின சுபர் என்றும் அந்த கிரகத்தின் மூலத்திரிகோண ஸ்தானமானது மறைவு ஸ்தானமாக வந்தால் அந்த கிரகம் லக்கினப்படி பாவர் என்ற அந்தஸ்தினை பெறுகிறது.
உதாணரமாக மேச லக்கினத்திற்கு குருபகவான் திரிகோண ஸ்தானமான 9ம் இடத்திற்கும் மறைவு ஸ்தானமான 12ம் இடத்திற்கும் அதிபதியாக வருகின்றார். மேச லக்கினத்திற்கு 9ம் இடம் தனுசு ஆகவும் 12ம் இடம் மீனமாகவும் அமையும். ஆனால்; குருபகவானின் மூலத்திரிகோண வீடானது தனுசு ஆகும். அந்த தனுசானது திரிகோண ஸ்தானமாக வருகிறது. ஆகவே மேச லக்கினத்திற்கு குரு பகவான் லக்கின சுபர் என்ற நிலையினை பெறுகின்றார்.
இப்பொழுது ஒரு உதாரணம் கொண்டு மேலே நான் சொன்ன கருத்துக்களை ஆராய்வோம். ஒரு பேப்பர், பேனா எடுத்து ராசி சக்கரம் வரைந்து கடக்க லக்கினத்தினை குறித்துக்கொள்ளுங்கள். 5, 10 இடங்களை அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள். இனி நான் கூறும் தகவல்களை நீங்கள் கீறிய மாதிரி ஜாதகத்துடன் ஒப்பிட்டு விளங்கிக்கொள்ளுங்கள்.
கடக லக்கினத்திற்கு செவ்வாய் பகவானானவர் பஞ்சம ஸ்தானம் எனப்படும் 2ம் திரிகோணமான 5ம் வீட்டிற்கும் கேந்திரங்களிலேயே மிகவும் அதிக பலமுடைய கேந்திரமான 10ம் வீட்டிற்கும் அதிபதியாக வருவார் செவ்வாய் பலமாக சுபர் பார்வையுடன் நல்ல இடத்தில் அமரும்போது தனது திசை புக்தியில் யோக பலன்களை அள்ளிக்கொடுப்பார். 5ம் இடத்திற்கு அதிபதியாக வந்தமையால் பூர்வீக சொத்துக்கள், பூர்வீக வீடு, குழந்தைப்பேறு, குழந்தைகளுக்கு நல்ல வாழ்வு, ஜாதகருக்கு அதிர்ஷ்டங்கள், குலதெய்வ அருள், விளையாட்டு துறையால் முன்னேற்ற்றம், போன்ற பலன்களையும் 10மிடமாக கேந்திரத்திற்கு அதிபதியாக வருவதால் புதிய தொழில் அமைப்புக்கள், தொழில் பதவியுயர்வு, ஜாதகருக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து, நாலுபேர் மரியாதையுடன் நடந்துகொள்ளும் நிலை, புதிய அமைப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பார்.
இந்த செவ்வாயானவர் ஒருவேளை தனது மூலத்திரிகோண வீடான மேஷத்திற்கு 6 / 8 / 12 இல் மறைந்து இருக்கும்போது கடக லக்கினத்திற்கு செவ்வாயின் ஒரு அற்புத அமைப்பாக தனது மூலத்திரிகோண வீடான மேஷத்திற்கு 6 / 8 இல் மறைவது பாதிப்பு தராது. ஏனெனில் மேஷத்திற்கு 6 இல் மறைந்து கன்னியில் இருக்கும்போது ஸ்தான அடிப்படையில் சில சிறி சிறு இன்னல்களை கொடுத்தாலும் தனது 8ம் விசேட பார்வையால் மீசத்தினை பார்த்து மேஷத்தினை வலுப்படுத்துவதோடு தானும் தனது மூலத்திரிகோணத்துடன் நேரடியாக தொடர்புகொண்டு பலம் பெறுவதால் தோஷமில்லை. அடுத்து மேஷத்திற்கு 8 இல் மறையும்போது தனது இன்னொரு ஆட்சி வீடான விருச்சிகத்தில் இருப்பதால் ""ஆட்சி பலம் பெறுவதால் தோஷமில்லை. தனது மூலத்திரிகோண வீடான மேஷத்திற்கு 12இல் மறைந்தாலும் திரிகோணமான 5ம் இடத்திற்கு 5 இல் இருப்பதால் நல்ல பலன்களையே வழங்குவார். ஆனாலும் இது மேலே குறிப்பிட்ட பலன்களுக்கு அடுத்தபடியான பலன்களையே வழங்கும் என்பதை கவனிக்குக...
இயற்கை முக்கால் பாவியான செவ்வாய் தான் அமரும் இடத்தினை தனது காரகத்துவம் ஊடாக பாதிப்பர் என்ற அமைப்பின்படி கடக்க லக்கினத்திற்கு 5ம் வீடான விருச்சிகத்தில் அவர் ஆட்சி பெறுவது நன்மையினை சற்று குறைக்கும். ஆனாலும் இது குற்றம் என்று கூறுமளவுக்கு இல்லை. ஏனெனின் தனது சொந்த வீட்டில் ஆட்சி நிலையில் இருக்கின்றார். இருப்பினும் தனது மூலத்திரிகோண வீடான மேஷம் கடக்க லக்கினத்திற்கு பெருமகேந்திரமான 10 இடமாக வருவதால் இங்கு "தசம அங்காரகன்" என்று விசேடப்படுத்தி ஜோதிட நூல்களில் குறிப்பிடப்படட நிலையில் அமர்வது மிகவும் சிறப்பானது. மேலும் இயற்கை பாவியான செவ்வாய் கேந்திரத்தில் அமர்வது நன்மை. அதுமட்டுமல்ல... மேஷத்தில் அமரும் செவ்வாய் தனது லக்கினப்படி 5ம் வீடான இடுவது மிகவும் சிறப்பானதாகும். இயற்க்கை வாவியானாலும் தனது வீடடை தானே பார்ப்பது அந்த வீட்டினை பலப்படுத்தும் என்ற அமைப்பின்படி 5ம் இடம் வலுவாகி நல்ல பலன்களை ஜாதகருக்கு கொடுக்கும். மேலும் பத்தில் இருக்கும் செவ்வாய் 5, 10மிட ஆதிபத்தியம் பெற்று லக்கினத்தை பார்ப்பதால் ஜாதகர் கோபக்காரராகவும் அவசரபுத்திக்காரராகவும் இருந்தாலும் சுய கெளரவம் உடைவர், குல தெய்வ ஆசி உடையவர், அதிர்ஷ்டமானவர் என்று சுப பலன்களே நடைபெறும். இந்த ஒரு அமைப்பினை மட்டும் வைத்தே பதிவினை எழுத்திக்கொண்டே போகலாம்... ஆனால் எனது நேர ஒதுக்கீடு காரணமாக இத்துடன் பதிவினை நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்.
ஜோதிடர் மற்றும் ஜோதிட ஆராச்சியாளர் ஹரிராம் தேஜஸ் B.Sc, I.Tec.

[ பிற்குறிப்பு :- பதிவு புரியவில்லையெனின் மீண்டும் மீண்டும் ஒரு 3-4 தடவையாவது பொறுமையாக படியுங்கள். நேரம் இல்லாத காரணத்தால் நீங்கள் உங்கள் சந்தேகங்களிற்கு பதில் அளிக்க முடியாத நிலை என்பதால் பதிவினை பலமுறை கருத்தூன்றி படித்த பின்னர் ஏற்படும் சந்தேகங்களை மட்டும் கமெண்டில் கேளுங்கள். எனக்கு நேரம் இருக்கும்போது விடை தருகின்றேன்...]

1 கருத்து: