ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

அங்கிசம் அறியும் வழி (அங்கிசநாதன்)


அங்கிசம் என்பதன் அர்த்தம்; தோள் கொடுத்தல், கூறு, பங்கு, வாழையடி வாழையாய் வளர வேண்டிய வம்சம் என்று அர்த்தம் கொள்ளலாம்.
ஒரு நட்சத்திரத்துக்கு ஒருவர் அதிபதியாக இருக்கும் போது, இன்னொருவர் அந்த நட்சத்திரத்தை தோள்கொடுத்து தூக்கி நிறுத்த முடியும் என்பதைக் காட்டுவதே அங்கிசம் என்பதாக நினைக்கிறேன்.
இப்போது குருவின் நட்சத்திரம் விசாகத்திற்கு சுக்கிரன் அங்கிசைநாதனாக வருகிறார். குரு எனும் கிரகம் சாரம் தருவதின் மூலம் இயக்கு சக்தியாக இருக்க, சுக்கிரன் அங்கிச நாதனாகி இயங்கு சக்தியாக இருப்பார். விசாகம் சாரம் பெறும் எந்தகிரகத்திற்கும் சாரநாதனும், அங்கிசைநாதனும் பலம்பெற்று இருந்தால்தான் முழுமையான பலன்கள் கிட்டும்.
தமிழ்மொழியில் இயற்றப்பட்ட மூத்த பழமையான ஜோதிட நூலான, “ஜாதக அலங்காரம்” என்கிற நூலில் அங்கிசப் பலனறியும் முறையினை தந்துள்ளார்கள். இது மிகவும் நுட்பமான விடயம்தான். ஆனால், அதிகம் பயன்படுத்தாத, விரிவுபடுத்தாத ஒரு விடயமாகவே உள்ளது. இதை “ஜோதிட ஆசான்கள்” விரிவாக ஆய்வு செய்து மக்களுக்குப் பயன்படும் விதமாக கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும்.
அங்கிசநாதன் அறிதல்.
அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும், ஒன்பது கிரகங்களான, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப் பட்டுள்ளது. இவர்களை, “அங்கிசநாதன்” என்று அழைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு கிரகங்களுக்கும் மூன்று நட்சத்திரங்களாக பிரித்துத்தரும்போது, அந்த ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் நான்கு, நான்கு பாதங்களாக, பன்னிரண்டு பாதங்களாக, பன்னிரண்டு இராசிகளுக்கும், (மேடம் முதல் மீனம் வரையிலான) தரப்படும்.
இப்போது ஒவ்வொருவருக்கும் ஒரு ஜென்ம நட்சத்திரம் இருக்கும் அல்லவா? அந்த ஜென்ம நட்சத்திரம், பன்னிரு பாகங்களில் ஒன்றில் அமையும். அது எத்தனையாவது பாகம் என்பதைக் கண்டுபிடித்து, அந்த எண்ணிக்கையை, மேடம் முதல் எண்ணிவர, பன்னிடண்டு இராசிகளில், ஏதாவது ஒன்றில் அமையும். அந்த இராசியின் அதிபர், “அங்கிசவான்” அல்லது “அங்கிசை” என்றும் அழைக்கப்படுகிறார்.
உதாரணமாக. ஒருவர் விசாகம் நான்காம் பாதத்தில் பிறந்துள்ளதாக வைத்துக் கொள்வோம். இவர் பிறந்த நட்சத்திரம் சுக்கிரனின் அங்கிசையில் வருகிறது. அதனால், குருவின் நட்சத்திரமாகவே இருந்தாலும், அந்த நட்சத்திரத்துக்கு தோள்கொடுத்து தூக்கி நிறுத்துபவன் சுக்கிரனாகவே இருப்பான். அதனால்தான் குருவின் நட்சத்திரம் விசாகத்திற்கு, சுக்கிரன் அங்கிசைநாதனாக வருகிறார்.

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.