ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

புதன், 18 ஏப்ரல், 2018

அரைகுறை ஜோதிடர் ஆயுளுக்கும் ஆபத்து

இந்த சிறு ஆதங்க பதிவை இப்படி ஆரம்பிப்போம்,
தமிழ் இலக்கணத்தில் உள்ள அகர, மகர, லகரத்தினையே இதற்கு எடுத்துக்கொண்டோமேயானால் ஒருவர் அகரஎழுத்துக்களை மகரமாக கொள்ளவேண்டும் என்றும் மகர எழுத்துக்களை லகரமாக கொள்ள வேண்டும் என்றும் சொன்னால் அந்த பித்தனை என்ன செய்ய வேண்டும்? அகர எழுத்துக்கள் என்பன இவைதான் மகர எழுத்துக்கள் என்பன இவைதான் லகர எழுத்துக்கள் என்பன இவைதான் என்று சான்றுகாட்ட ஆதாரமாக பழம்பெரும் தமிழ் இலக்கண நூல்களை காட்டினால் அவை இடைச்செருகல் அதனால் ஏற்க முடியாது என்றும் சங்ககாலம்(கி.மு 300 தொடக்கம் கி.பி 300), சங்கமருவியகாலத்தில்(கி.பி 300 - 700வரை) வாழந்த தமிழ் பண்டிதர்களிடமும் புலவர்களிடமும் சென்றுதான் கேட்டறிய வேண்டும் என்று கூறினால் எப்படி இருக்கும்? இது போன்ற (#௯௯௯௯)களை தமிழர்கள் கல்லால்அடித்தே கொல்லவேண்டாமா? 
உங்கள் அனைவருக்கும் புரியும் வகையில் இன்னுமொரு உதாரணம் கூறவேண்டும் என்றால் நாம் யாரும் கடவுளே நேரடியாக கண்டதில்லை என்பதற்காக உங்களுக்கு விருப்பமான ஒரு கடவுளை(எனக்கு சிவன்) அவரெல்லாம் கடவுளே இல்லை. பேய்களும்பிசாசுக்களும்தான் கடவுள் என்று ஒருவன்கூறுகிறான். புராணஇதிகாசங்களை காட்டி புரியவைக்கமுயன்றாலும் அதெல்லாம் இடைச்செருகல் நம்பமுடியாது வேண்டுமென்றால் சம்பந்தரையோ அப்பரையோ கொண்டுவந்து அவர்சொன்னால் பிறகு யோசிப்போம் எனும் (#௯௯௯௯)களை என்ன செய்ய வேண்டும் என்று இறைபக்தர்களான நீங்களே தீர்மானியுங்கள். இதுபோன்ற கீழ்த்தரமான கயவர்கள் மகாபுனிதமான ஜோதிடசாஸ்திரத்திலேயே; கறையான் போல இருந்துகொண்டு அதனையே அரித்து தம் வயிறுவளர்க்கின்றனர். பாரம்பரிய வேதஜோதிடமென்பது மூலநூலினை ஆதாரமாக கொண்டது. அதில் ஞானம் பெறாது, அதனை ஆதாரமாக்கி பேச திராணியில்லாதவன்எல்லாம் தான் பாரம்பரிய ஜோதிடர்என சொல்வதைவிட தற்கொலை செய்துகொள்வது சிறந்தது என்று நான் எண்ணுகிறேன். மேற்கூடிய இரு உதாரணங்களிலும் மேற்கோள் காட்டியவாறு பேசிய ஒருவனை ஒரு ஜோதிடனாக; நான் நடாத்தும் "ஜோதிட கேள்வி பதில்எனும் பெயருடைய முகநூல் குழுவிலிருந்து எட்டிஉதைந்துவிட்டேன். இந்த பதிவை வாசிக்கும் போதே ஒருசில அரைகுறை பாரம்பரிய ஜோதிடர்க்கு புரியும் இனி தங்கள் பருப்பு இங்கு வேகாது என... அவர்கள் யாருக்கும் சொல்லாமல் குழுவிலிருந்து நடையைகட்டிவிடுங்கள். மற்றைய ஜோதிட முறைகளை பற்றி எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் இந்த குழுவில் எந்தவொரு பாரம்பரிய ஜோதிட பதிவு இட்டாலும் பதிவாளர் தமது பதிவை மூலநூல் ஏதாவது ஒன்றை தமது பதிவிற்கு ஆதாரமாக/ சான்றாக காட்ட வேண்டும். முடியாதவர்கள், அரைகுறை பாரம்பரிய ஜோதிடர்கள் பதிவிடவோ கருத்திடவோ வேண்டாம்! முதலில் பாரம்பரிய ஜோதிடத்தினை முறையாக பயிலுங்கள். இதற்கு 3-5 வருடங்கள் வரை கட்டாயம் எடுக்கும். பாரம்பரிய வேத ஜோதிடத்தில் நான்று வகுப்பு சென்றவுடன் தன்னை ஜோதிடனாக எண்ணுபவனைவிட அப்படி ஒரு எண்ணத்தினை தனது சுயலாபத்துக்காக ஏற்படுத்தும் அந்த ஆசிரியனே மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவன் என்பதில் எனக்கு எந்தவொரு மறுப்பும் இல்லை.
சில இடங்களில் (#௯௯௯௯) இவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன். உங்கள் பாணியில் உங்கள் வழக்கில் அதற்கு ஒரு சொல்சேர்த்து படியுங்கள். அப்போதுதான் பதிவு சுவாரஸ்யமாக இருக்கும்... எனது ஆதங்கமும் ஆவேசமும் சாதாரண மக்களுக்கு புரிய வாய்ப்பில்லை என்றாலும் நீங்கள் பாரம்பரிய ஜோதிடத்தினை உயிராக கொண்ட ஜோதிடராக அல்லது ஜோதிட மாணவனாக இருந்தால் உங்களுக்கு கட்டாயம் புரியும்...

பாவத்பாவம் என்றால் என்ன?

எனது Facebbok Page இல் வாசகர் ஒருவரது கேள்வி :- ஜோதிஷ ஆசானிடம் ஒரு கேள்வி.
லக்னம் நான் என்றால் என் மனைவிக்கு ஏழாவது பாவம்
என் குழந்தை யின் பாவம் ஐந்து. என் மனைவி என் குழந்தைக்கு தாய் எனும்போது
ஐந்துக்கு. ஏழாம் பாவம் மூன்று என்றால் தாய்க்கு நான்காம் பாவம் என்று சொல்வது ஏன்?
மேலும்.......
என் தந்தை க்கு. ஒன்பதாம் பாவம். என் அம்மா என் தந்தக்கு மனைவிதானே... அப்படியானால். ஒன்பதுக்கு. ஏழாவது பாவம். மூன்று தானே.....
பிறகு ஏன்.... தாய்க்கு நான்காம் பாவம்....
எனது பதில் :- வணக்கம்,
ஒரு பாவத்திற்கு இன்னொரு பாவம் எடுத்து கணிப்பது பாவத்பாவ முறையாகும். பாரம்பரிய ஜோதிடத்தை ரிஷிகள் தெளிவாக வகுத்துள்ளனர். ஆனால் தற்போது ஜோதிடம் திரிபுபடுத்தப்பட்டு தவறான வகையில் ஜோதிடம் பரப்புரை செய்யப்படுகிறது. அந்த வகையில் மூலநூல்களில் உங்களின் கேள்விக்கு ஏற்ற விளக்கத்தினை மந்த்ரேஸ்வரர் அருளிய பலதீபிகையில் பாவத் பாவம் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஜாதகரிற்கும் குறித்த உறவுகளிற்குமான தொடர்பை ஸ்தானங்களை வைத்து அறிய வேண்டும். அதாவது தாய் என்றால் 4ம் ஸ்தானம். நம் சொத்து என்றால் 4ம் ஸ்தானம். ஆனால் பாவத் பாவ அடிப்படையில் ஜாதகபலன் அறிய வேண்டும் என்றால் உயிர்க்காரகத்துவத்திற்கு காரகனை (முதன்மையாக கொண்டு) முதற்கொண்டும் பொருள்காரகத்திற்கு ஸ்தானத்தை முதற்கொண்டும் பலன் அறிய வேண்டும். உதாரணமாக காலையில் பிறந்த ஒருவரின் தந்தையின் உடல்நலகோளாறு பற்றியறிய சூரியனிலிருந்து 6ம் இடத்தை பரிசீலிக்க வேண்டும். ஆனால் 99%மான ஜோதிடர்கள் ஒன்பதிற்கு ஆறாமிடத்தை ஆராய்கின்றனர். இது தவறானது. இப்படி தவறாக பார்ப்பதால்தான் தந்தையின்(9) மனைவி(7) ஸ்தானம் 4 என வராமல் ஏன் 3 என வருகிறது என்று குழம்பிக்கொள்கின்றனர். பாரம்பரிய ஜோதிடத்தை பொறுத்தவரை மூலநூல்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். நுனிப்புல் மேய்ந்துவிட்டு பாரம்பரிய ஜோதிடத்தை பலர் தவறான வகையில் கொண்டுசெல்வது கண்டிக்கதக்கது.  இக்கருத்தை ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் மத்தியில் இந்த பதிவு செல்லட்டும்...
 பதிவு புரிந்திருந்தால் கமெண்டில் இந்த கேள்விக்கான பதிலை கூறுங்கள்
கேள்வி :- பகலில் பிறந்த ஒருவரின் தாயின் சொத்தில் உள்ள எதிர்ப்புக்களை குறிக்கும் பாவம் எது?

இதற்கான விடையினை பார்த்தோமேயானால் 
பாவத்பாவத்தினை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பலதீபிகை வழிகாட்டுகிறது என்று மேலே கூறியிருந்தேன். அந்த விதிகளின்படி;
ஜாதகரிற்கும் அவரது தாய்க்குமான நிலையினை பற்றியறிய மட்டுமே நான்காமிடத்தை அறிய வேண்டும். ஆனால் ஜாதகரது ஜாதகம் மூலமாக தாயினை பற்றியறிய வேண்டுமாயின் பாவத்பாவம் மூலமாகவே அறிய முடியும். அந்தவகையில் தாய்(உயிர்காரகத்துவம்) பற்றி அறிய மகன் ஜாதகத்தில் சுக்கிரன் நிற்கும் இடத்தை லக்கினமாக கொள்ள வேண்டும். தற்போது இதனை தாயின் ஜாதகபலனிற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். பகலில் பிறந்தவர்க்கு மாத்ருகாரகன் சுக்கிரன்; இரவில் பிறந்தோர்க்கு மாத்ருகாரகன் சந்திரன். ஆகவே சுக்கிரன் முதற்கொண்டு பலனறிய பாரம்பரிய வேத ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது... அதன்படி சுக்கிரன் இருக்கும் பாவத்தை லக்கினமாக கொண்டால் அதிலிருந்து நான்காம்பாவம் தாயின் சொத்துக்களை குறிக்கும். சொத்து என்பது பொருள் காரகத்துவம் என்பதால் அந்த சொத்துதொடர்பான விரிவான பலன்களை அறிய அதனை (சுக்கிரனிலிருந்து நான்காம் இடத்தை) லக்கினமாக கொண்டு பலன்அறிய வேண்டும் என்பது பாவத்பாவ விதி. ஆகவே சுக்கிரனிலிருந்து(₫) நான்காம்(¤) இடத்திற்கு ஆறாமிடமானது(~) #முறையே தாயின்(₫) சொத்துக்களிலுள்ள(¤) பிரச்சனை/வழக்குகளை(~) குறிக்கும். இதனை சுக்கிரனிலிருந்து எண்ணிப்பார்த்தால் அது ஒன்பதாம் பாவமாக அமையும்... இதுவே பாவத்பாவத்தை சரியாக பயன்படுத்தும் முறை ஆகும்...


வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகம்

வணக்கம்,

இது "வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகம்" எனும் தொடரின் அறிமுக பதிவு...

ஜோதிடத்தில் கிரகங்களாக ஒன்பது கிரகங்களே உள்ளன. அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு கேது ஆகும்.ஆனாலும் ஜோதிடத்தில் 7 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்ட ராசிகளை நம் முன்னோர்கள் அடையாளம் கண்டனர். ஜோதிட மேதை வராஹமிஹரர் தனது பிருஹத் ஜாதகம் என்ற வடமொழி நூலில் இந்த 7 கிரகங்களைப் பற்றியே எழுதியுள்ளார். அவர் ராகு கேது பற்றி ஒரு வரிகூட பேசவில்லை. அவர் இந்த 7 கிரகங்களுக்கே தனது கிரந்தம் முழுவதிலும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவரின் பிருஹத் ஜாதகம் என்ற நூலையே ஜோதிட வல்லுனர்கள் மூல நூலாக/ஆதார நூலாக (ரெஃப்ரன்ஸ்) பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவருக்கு முன்பும், அவருக்கு பின்பும் எழுதப்பட்ட பல கிரந்தங்களில் இராகு, கேதுக்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. தமிழிலும் அதற்கான சான்றுகள் உள்ளன. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சைவ சமய 63 நாயன்மார்களில், முக்கியமான நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் தனது கோளறு பதிகத்தில், இராகு கேதுக்களைப் பற்றியும் பாடியுள்ளார்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோவையும் சேர்த்து ஒரு சிலர் இதற்கும் ஜாதகத்தில் இடம் கொடுத்து பலன் சொல்லி வருகின்றனர். உங்களிற்கு ஒன்று தெரியும் உத்திரகாலாம்ருதத்தினை எழுதிய காளிதாசர் கிரகங்களின் ஒளிக்கு ஏற்ப அவற்றிற்கு இந்து லக்கினஎண் கொடுத்தார். இதன்படி முழு அசுபராகவும் சூரியனிலிருந்து மிகத்தொலைவில் அமைந்து ஒளி பிரதிபலிப்பு திறன் மிககுறைவாக உள்ள சனிக்கு அவர் கொடுத்த எண் ஒன்று... இதற்கும் கீழே (அதவாது சூரியனிலிருந்து சனிக்கும் தொலைவாக) உள்ள கிரகங்களால் குறிப்பிடத்தக்க பலன் கிடைக்கப்போவதில்லை என்பதை எந்தவொரு வானியல்சாதனமும் இல்லாமல் தம் ஞானதிருஷ்டியால் ஜோதிடத்தினை படைத்த ஞானிகளிற்கு தெரியாதா என்ன? யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோவையும் கணக்கில் எடுப்பவர்கள் பேசாமல் மேலை நாட்டு ஜோதிட முறையில் பயணிப்பதே சிறந்தது. ஏற்கனவே சமுத்திரமாக பரந்திருக்கும் பாரம்பரிய ஜோதிடத்தில் காரைக்காண முடியாதவர்கள் யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோவையும் தமது படகில் போட்டுகொண்டு நடுக்கடலில் மூழ்கிவிடவேண்டியதுதான்... ஏற்கனவே பாரம்பரிய வேத ஜோதிடத்தின் ஆழத்தை அளவிடமுடியாதோர் அதன் தனித்தன்மையினையும் சிறப்பையும் கெடுக்கும் வண்ணம் முகநூலில் ஆயிரம் பதிவுகள் இடுகின்றனர். இதுவா பாரம்பரிய ஜோதிடம் என குழம்பியிருக்கும் ஜோதிட ஆர்வலர்களிற்கு ராகு கேது நீங்கலாக 7 கிரகங்கள், பராசரர் கூறிய 32 வகையான தசாமுறைக்கும் (இந்த 32வகையான தசாபுக்தியில் ஒன்றுதான் நாம் பயன்படுத்தும் நட்சத்திர தசா எனும் விம்சோத்தரி தசா முறை) புதிதான தசாபுத்தி பகுப்பினையும் உடைய பிருஹத் ஜாதக மூலநூலின் முழு அத்தியாயங்களையும் சுலோகங்களையும் தரும் "வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகம்" எனும் தொடரின் அறிமுகமாக இதனை எடுத்துக்கொண்டு அடுத்து வராகமிஹிரரின் ஜோதிட கணிப்பு திறமையை காண்போம்...

நாம் அனைவரும் அறிந்த விக்கிரமாதித்த மன்னன் தன் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். அவருக்கு ஒரு மகன். அவனை உயிருக்கு உயிராக வளர்த்து வந்தார். ஒருநாள் தன் மகனின் வருங்காலம் பற்றி அறிய ஆவல் கொண்ட விக்கிரமாதித்தன், ஜோதிடர் ஒருவரை அழைத்திருந்தார். அவரிடம் தன் மகன் ஜாதகத்தை கொடுத்து அவன் எதிர்காலம் அறிய சொன்னார்.   ஜாதகத்தை கணித்த ஜோதிடர், அதிர்ச்சி அடைந்தார். மௌனமாக இருந்தார். உடனே அரசர் ஜோதிடரை பார்த்து என்னவென்று கேட்டார்.  அதற்கு ஜோதிடர்,  “விக்கிரமாதித்தா… உன் மகன் வராகத்தினால்(பன்றி) இன்னும் சில தினங்களில் தாக்கப்பட்டு இறப்பான்". என்று கூறினார்.  விக்கிரமாதித்தன் தாளாத துயரம் கொண்டார். வேதனையால் துவண்டார். “அய்யோ என் மகன் என்னை விட்டு போய் விடுவானா?“ என்று கலங்கினார். “இதற்கு என்ன பரிகாரம்?“ என்று ஜோதிடரை கேட்டார்.  ஜோதிடர், “இதற்கு பரிகாரம் இல்லை. இது ஆண்டவன் எழுதிய விதி.“ என்று கூறி விட்டார். உடனே விக்கிரமாதித்தன், ஜோதிடர் கூறியதை பொய்யாக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் பிராத்தனை செய்து கொண்டார். தனது நாட்டினை சூழவுள்ள அனைத்து இடங்களில்  பன்றிகளை கொன்று குவித்தான். ஜோதிடர் கூறிய தினம் வந்தது. அன்று விக்கிரமாதித்தனால் சாப்பிடக் கூட முடியாமல் மனதில் மரண பயம் எழுந்தது. அதனால் தன் மகனை வெளியே எங்கும் அனுப்பாமல் தன் அரண்மனையில் பத்திரமாக பாதுகாப்பாக ஒரு அறையில் தங்க வைத்தார். தன் மகனை சுற்றி பாதுகாவலர்களை அமைத்தார். “யாரையும் என் அனுமதியில்லாமல் என் மகன் அறைக்குள் அனுமதிக்ககூடாது." என்று கட்டளையிட்டார். ஒரு ஈ கூட தன் மகனை நெருங்க விடாத அளவில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.  அன்று ஒரு வினாடி, ஒரு யுகம் போல் இருந்தது. இந்த ஒரு நாள் பாதகம் இல்லாமல் போனால் போதும் என்ற மன ஓட்டத்திலேயே இருந்தார் மன்னர் விக்கிரமாதித்தன்.   அடிக்கடி தன் மகனை சென்று கவனித்து வந்தார். சேவகனும் இளவரசனை அவ்வப்போது பார்த்து  கொண்டு விக்கிரமாதித்தனுக்கு தகவல் சொல்லி கொண்டு இருந்தார்.  சூரியன் அஸ்தனமாகும் நேரம்.  “அப்பாடி…. எப்படியோ பாதி பொழுது சென்றுவிட்டது. இன்னும் சில மணி நேரத்தில் விடிந்து விடும். இதுவரை வராத யமன் இனி வரவா போகிறான்.? என் நகரத்துக்கு, அதுவும் அரண்மனைக்குள் எப்படி ஒரு மிருகம் வரும்.? என்ற மகிழ்ச்சியால், “என் மகனை பார்த்து விட்டுவா" என்று சேவகனிடம் கட்டளையிட்டார் மன்னர் விக்கிரமாதித்தன்.

சேவகன் சென்று பார்த்தான். அலறினான்.  எது நடக்கக் கூடாது என்று நினைத்தார்களோ அது நடந்தே விட்டது.  இளவரசனை கண்ட காட்சியை பார்த்து மனம் பதறி,  “மன்னா…..“ என்று கதறி கொண்டே ஒடி வந்தான் சேவகன்.  விக்கிரமாதித்தனை பார்த்து கதறி அழுதான். சேவகனின் கதறலை கண்ட விக்கிரமாதித்தன், ஏதோ விபரீதம் என்று உணர்ந்தாரே தவிர ஒன்றும் விளங்கவில்லை. பதறி அடித்து கொண்டு தன் மகன் இருக்கும் அறைக்கு ஒடினார். அங்கே தன் மகனை கண்ட விக்கிரமாதித்தன், அதிர்ச்சியில் அசையாமல் சிலையாக நின்றார்.  விக்கிரமாதித்தனின் மகன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான்.  எல்லோரும் மன்னரை சமாதானம் செய்தார்கள். அவரது மகனின் அறையில் மாட்டியிருந்த பன்றியின் உலோக சிலை இளவரசன்மீது வீழ்ந்து அவன் உடலை துளைத்திருந்தது.  சில நிமிடம் கழித்து அரசர் சுயநினைவுக்கு வந்தார். உடனே ஜோதிடரை அழைத்து வரச் சொன்னார்.. ஜோதிடர் கூறியது உண்மைதான் என்று விக்கிரமாதித்தன் உணர்ந்தார். அந்த ஜோதிடர்தான் “மிகிரர்". இந்த சம்பவத்தைச் சரியாகக் கணித்ததாலேயே மிஹிரருக்கு, "வராஹ மிஹிரர்"எனப் பெயர் வந்தது. இதைத் தவிர்த்திருக்க முடியாதா? எனக் கேட்டஅரசனுக்கு , மிஹிரரின் பதில்
என்ன தெரியுமா? "ஜோதிடர்களால், கணித்து சொல்ல முடியும். ஆனால் ஒரு நல்ல யோகியால்
நடக்க இருப்பதையும் மாற்ற முடியும் அதுவும் இறைவன் அனுமத்தித்தால் என்பதாகும்... மிஹிரர் ஜோதிட உலகின் மகாமேதை என போற்றப்படுபவர். அப்பேற்பட்ட ஜோதிட மாமேதை எழுதிய பாரம்பரிய ஜோதிட மூலநூலான "பிருகத் ஜாதகம்" அத்தியாயம் ஒன்றினை எனது முகநூல் பக்க பதிவில் தொடர்ந்து காண்போம்.

"வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகம்" எனும் இத்தொடர் முழுமையாக முடிக்க எவ்வளவு காலம் சென்றாலும் என்னுடன் தொடர்ந்து முகநூல் வழியில் பயணியுங்கள்...
எனது முகநூல் பக்கம் -  facebook.com/astrologerhariram

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.