ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

புதன், 18 ஏப்ரல், 2018

வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகம்

வணக்கம்,

இது "வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகம்" எனும் தொடரின் அறிமுக பதிவு...

ஜோதிடத்தில் கிரகங்களாக ஒன்பது கிரகங்களே உள்ளன. அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு கேது ஆகும்.ஆனாலும் ஜோதிடத்தில் 7 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்ட ராசிகளை நம் முன்னோர்கள் அடையாளம் கண்டனர். ஜோதிட மேதை வராஹமிஹரர் தனது பிருஹத் ஜாதகம் என்ற வடமொழி நூலில் இந்த 7 கிரகங்களைப் பற்றியே எழுதியுள்ளார். அவர் ராகு கேது பற்றி ஒரு வரிகூட பேசவில்லை. அவர் இந்த 7 கிரகங்களுக்கே தனது கிரந்தம் முழுவதிலும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவரின் பிருஹத் ஜாதகம் என்ற நூலையே ஜோதிட வல்லுனர்கள் மூல நூலாக/ஆதார நூலாக (ரெஃப்ரன்ஸ்) பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவருக்கு முன்பும், அவருக்கு பின்பும் எழுதப்பட்ட பல கிரந்தங்களில் இராகு, கேதுக்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. தமிழிலும் அதற்கான சான்றுகள் உள்ளன. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சைவ சமய 63 நாயன்மார்களில், முக்கியமான நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் தனது கோளறு பதிகத்தில், இராகு கேதுக்களைப் பற்றியும் பாடியுள்ளார்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோவையும் சேர்த்து ஒரு சிலர் இதற்கும் ஜாதகத்தில் இடம் கொடுத்து பலன் சொல்லி வருகின்றனர். உங்களிற்கு ஒன்று தெரியும் உத்திரகாலாம்ருதத்தினை எழுதிய காளிதாசர் கிரகங்களின் ஒளிக்கு ஏற்ப அவற்றிற்கு இந்து லக்கினஎண் கொடுத்தார். இதன்படி முழு அசுபராகவும் சூரியனிலிருந்து மிகத்தொலைவில் அமைந்து ஒளி பிரதிபலிப்பு திறன் மிககுறைவாக உள்ள சனிக்கு அவர் கொடுத்த எண் ஒன்று... இதற்கும் கீழே (அதவாது சூரியனிலிருந்து சனிக்கும் தொலைவாக) உள்ள கிரகங்களால் குறிப்பிடத்தக்க பலன் கிடைக்கப்போவதில்லை என்பதை எந்தவொரு வானியல்சாதனமும் இல்லாமல் தம் ஞானதிருஷ்டியால் ஜோதிடத்தினை படைத்த ஞானிகளிற்கு தெரியாதா என்ன? யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோவையும் கணக்கில் எடுப்பவர்கள் பேசாமல் மேலை நாட்டு ஜோதிட முறையில் பயணிப்பதே சிறந்தது. ஏற்கனவே சமுத்திரமாக பரந்திருக்கும் பாரம்பரிய ஜோதிடத்தில் காரைக்காண முடியாதவர்கள் யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோவையும் தமது படகில் போட்டுகொண்டு நடுக்கடலில் மூழ்கிவிடவேண்டியதுதான்... ஏற்கனவே பாரம்பரிய வேத ஜோதிடத்தின் ஆழத்தை அளவிடமுடியாதோர் அதன் தனித்தன்மையினையும் சிறப்பையும் கெடுக்கும் வண்ணம் முகநூலில் ஆயிரம் பதிவுகள் இடுகின்றனர். இதுவா பாரம்பரிய ஜோதிடம் என குழம்பியிருக்கும் ஜோதிட ஆர்வலர்களிற்கு ராகு கேது நீங்கலாக 7 கிரகங்கள், பராசரர் கூறிய 32 வகையான தசாமுறைக்கும் (இந்த 32வகையான தசாபுக்தியில் ஒன்றுதான் நாம் பயன்படுத்தும் நட்சத்திர தசா எனும் விம்சோத்தரி தசா முறை) புதிதான தசாபுத்தி பகுப்பினையும் உடைய பிருஹத் ஜாதக மூலநூலின் முழு அத்தியாயங்களையும் சுலோகங்களையும் தரும் "வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகம்" எனும் தொடரின் அறிமுகமாக இதனை எடுத்துக்கொண்டு அடுத்து வராகமிஹிரரின் ஜோதிட கணிப்பு திறமையை காண்போம்...

நாம் அனைவரும் அறிந்த விக்கிரமாதித்த மன்னன் தன் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். அவருக்கு ஒரு மகன். அவனை உயிருக்கு உயிராக வளர்த்து வந்தார். ஒருநாள் தன் மகனின் வருங்காலம் பற்றி அறிய ஆவல் கொண்ட விக்கிரமாதித்தன், ஜோதிடர் ஒருவரை அழைத்திருந்தார். அவரிடம் தன் மகன் ஜாதகத்தை கொடுத்து அவன் எதிர்காலம் அறிய சொன்னார்.   ஜாதகத்தை கணித்த ஜோதிடர், அதிர்ச்சி அடைந்தார். மௌனமாக இருந்தார். உடனே அரசர் ஜோதிடரை பார்த்து என்னவென்று கேட்டார்.  அதற்கு ஜோதிடர்,  “விக்கிரமாதித்தா… உன் மகன் வராகத்தினால்(பன்றி) இன்னும் சில தினங்களில் தாக்கப்பட்டு இறப்பான்". என்று கூறினார்.  விக்கிரமாதித்தன் தாளாத துயரம் கொண்டார். வேதனையால் துவண்டார். “அய்யோ என் மகன் என்னை விட்டு போய் விடுவானா?“ என்று கலங்கினார். “இதற்கு என்ன பரிகாரம்?“ என்று ஜோதிடரை கேட்டார்.  ஜோதிடர், “இதற்கு பரிகாரம் இல்லை. இது ஆண்டவன் எழுதிய விதி.“ என்று கூறி விட்டார். உடனே விக்கிரமாதித்தன், ஜோதிடர் கூறியதை பொய்யாக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் பிராத்தனை செய்து கொண்டார். தனது நாட்டினை சூழவுள்ள அனைத்து இடங்களில்  பன்றிகளை கொன்று குவித்தான். ஜோதிடர் கூறிய தினம் வந்தது. அன்று விக்கிரமாதித்தனால் சாப்பிடக் கூட முடியாமல் மனதில் மரண பயம் எழுந்தது. அதனால் தன் மகனை வெளியே எங்கும் அனுப்பாமல் தன் அரண்மனையில் பத்திரமாக பாதுகாப்பாக ஒரு அறையில் தங்க வைத்தார். தன் மகனை சுற்றி பாதுகாவலர்களை அமைத்தார். “யாரையும் என் அனுமதியில்லாமல் என் மகன் அறைக்குள் அனுமதிக்ககூடாது." என்று கட்டளையிட்டார். ஒரு ஈ கூட தன் மகனை நெருங்க விடாத அளவில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.  அன்று ஒரு வினாடி, ஒரு யுகம் போல் இருந்தது. இந்த ஒரு நாள் பாதகம் இல்லாமல் போனால் போதும் என்ற மன ஓட்டத்திலேயே இருந்தார் மன்னர் விக்கிரமாதித்தன்.   அடிக்கடி தன் மகனை சென்று கவனித்து வந்தார். சேவகனும் இளவரசனை அவ்வப்போது பார்த்து  கொண்டு விக்கிரமாதித்தனுக்கு தகவல் சொல்லி கொண்டு இருந்தார்.  சூரியன் அஸ்தனமாகும் நேரம்.  “அப்பாடி…. எப்படியோ பாதி பொழுது சென்றுவிட்டது. இன்னும் சில மணி நேரத்தில் விடிந்து விடும். இதுவரை வராத யமன் இனி வரவா போகிறான்.? என் நகரத்துக்கு, அதுவும் அரண்மனைக்குள் எப்படி ஒரு மிருகம் வரும்.? என்ற மகிழ்ச்சியால், “என் மகனை பார்த்து விட்டுவா" என்று சேவகனிடம் கட்டளையிட்டார் மன்னர் விக்கிரமாதித்தன்.

சேவகன் சென்று பார்த்தான். அலறினான்.  எது நடக்கக் கூடாது என்று நினைத்தார்களோ அது நடந்தே விட்டது.  இளவரசனை கண்ட காட்சியை பார்த்து மனம் பதறி,  “மன்னா…..“ என்று கதறி கொண்டே ஒடி வந்தான் சேவகன்.  விக்கிரமாதித்தனை பார்த்து கதறி அழுதான். சேவகனின் கதறலை கண்ட விக்கிரமாதித்தன், ஏதோ விபரீதம் என்று உணர்ந்தாரே தவிர ஒன்றும் விளங்கவில்லை. பதறி அடித்து கொண்டு தன் மகன் இருக்கும் அறைக்கு ஒடினார். அங்கே தன் மகனை கண்ட விக்கிரமாதித்தன், அதிர்ச்சியில் அசையாமல் சிலையாக நின்றார்.  விக்கிரமாதித்தனின் மகன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான்.  எல்லோரும் மன்னரை சமாதானம் செய்தார்கள். அவரது மகனின் அறையில் மாட்டியிருந்த பன்றியின் உலோக சிலை இளவரசன்மீது வீழ்ந்து அவன் உடலை துளைத்திருந்தது.  சில நிமிடம் கழித்து அரசர் சுயநினைவுக்கு வந்தார். உடனே ஜோதிடரை அழைத்து வரச் சொன்னார்.. ஜோதிடர் கூறியது உண்மைதான் என்று விக்கிரமாதித்தன் உணர்ந்தார். அந்த ஜோதிடர்தான் “மிகிரர்". இந்த சம்பவத்தைச் சரியாகக் கணித்ததாலேயே மிஹிரருக்கு, "வராஹ மிஹிரர்"எனப் பெயர் வந்தது. இதைத் தவிர்த்திருக்க முடியாதா? எனக் கேட்டஅரசனுக்கு , மிஹிரரின் பதில்
என்ன தெரியுமா? "ஜோதிடர்களால், கணித்து சொல்ல முடியும். ஆனால் ஒரு நல்ல யோகியால்
நடக்க இருப்பதையும் மாற்ற முடியும் அதுவும் இறைவன் அனுமத்தித்தால் என்பதாகும்... மிஹிரர் ஜோதிட உலகின் மகாமேதை என போற்றப்படுபவர். அப்பேற்பட்ட ஜோதிட மாமேதை எழுதிய பாரம்பரிய ஜோதிட மூலநூலான "பிருகத் ஜாதகம்" அத்தியாயம் ஒன்றினை எனது முகநூல் பக்க பதிவில் தொடர்ந்து காண்போம்.

"வராஹ மிஹிரரின் பிருஹத் ஜாதகம்" எனும் இத்தொடர் முழுமையாக முடிக்க எவ்வளவு காலம் சென்றாலும் என்னுடன் தொடர்ந்து முகநூல் வழியில் பயணியுங்கள்...
எனது முகநூல் பக்கம் -  facebook.com/astrologerhariram

GHT

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

வணக்கம் ஐயா உங்களது பதிவு மிகவும் ஆச்சயர்மாகவும் சுவாரசியமாகவும் உள்ளது தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன் தயவுசெய்து இங்கேயே பதிவிடுங்கள் Facebook சென்றால் கவனம் திசை மாறிவிடும் தேவரீர் தாங்கள் என்போன்ற ஆர்வலர்களுக்காக மனமிரங்க வேண்டும்!

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.