ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

வெள்ளி, 5 ஜூன், 2020

தசாம்சம் - 30 குறிப்புக்கள்


ராசிக்கட்டத்தில் தொழில் பற்றி மேம்போக்காக அறிந்தாலும் தொழில் தொடர்பான விரிவான பலனை அறிய தசாம்ச சக்கரம் (D-10) போட்டு பலனை நுணுக்கமாக அறியவேண்டியது அவசியமாகும். தசாம்சம் எனும் வர்க்க சக்கரம் ஊடாக ஜாதகரது தொழில் அமைப்புக்களை ஆராயலாம் என்று உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். பிரிவுகள் என்பதன் சம்ஸ்கிருத சொல் அம்சம் ஆகும். தசம் என்றால் பத்து. எனவே ராசிச்சக்கரத்தினை (ராசிச்சரத்தின் ஒவ்வொரு வீடுகளையும்) பத்து பிரிவுகளாக முறையாக பிரித்து  எடுக்கும் வர்க்க சக்கரமே D 10 எனப்படும் தசாம்ச சக்கரம் ஆகும். இங்கு நாம் பாவகம் அல்லது பாவம் என்ற சொல்லினை பயன்படுத்த கூடாது, வீடு அல்லது ஸ்தானம் என்ற சொல்லினையே பயன்படுத்த வேண்டும்.. அதுவே சரியானது. அது ஏன் என்று ஒரு பதிவு விரைவில் பதிகிறேன். காத்திருங்கள். இப்போது தசாம்ச சக்கரம் பற்றிய இரத்தின சுருக்க குறிப்புக்களையும் தசாம்ச சக்கரம் கொண்டு பலன் சொல்வது எப்படி எனவும் பார்ப்போம்.,

1. தசாம்ச லக்னாதிபதி நல்ல நிலையில் பலமாக இருந்தால் தொழில் இலகுவாக கிடைக்கும் மேலும் தொழில்நிலை பொதுவாக நன்றாகவே இருக்கும்.

2. நமது ராசிக்கட்டத்தின் 10ம் அதிபதி தசாம்ச சக்கரத்தில் நல்லநிலையில் இருந்தால் தொழில் ஸ்திரமாக இருக்கும். மேலும் தசாம்ச சக்கரத்தில் சனிபகவானும் நல்ல நிலையில் வலுவாக இருக்கவேண்டியது அவசியமாகும்.

3. தசாம்ச சக்கரத்தின் 2 மற்றும் 11ம் வீட்டில் இருக்கும் கிரக காரகம் மூலம் ஜாதகருக்கு பணம் அல்லது ஆதாயம் கிடைக்கும். இவர்கள் ராசிக்கட்டத்தில் பலமாகவும் சுபமாகவும் இருக்கும் நிலைக்கேற்ப பலன் கூடிக்குறையும்.

4. தசாம்ச சக்கரத்தில் 6ம் வீடு வலுவாக இருந்தால் ஜாதகர் சம்பளம் பெறும்(பிறரிடம்) தொழில் செய்வதற்க்கு உரியவர் எனலாம். மாறாக 7ம் இடம் வலுவாக இருந்தால் ஜாதகர் சுயதொழிலுக்கு உரியவர்.

5. தசாம்சத்தில் 5ம் வீடு அசுப விளைவை தரக்கூடியது ஏனெனில் 5ம் வீடு தொழில் ஸ்தானமான 10க்கு 8ம் வீடாவதினால்.

6. தசாம்சத்தில் 9ம் வீடு & 9ம் அதிபனும், சூரியனும் மேலதிகாரியை குறிக்கும். இவை அசுபர்களால் பாழ்பட்டால் மேலதிகாரியின் தொந்தரவு இருக்கும்.

7. தசாம்ச லக்னாதிபதி 9ல் இருந்தால் ஜாதகர் சுய தொழிலின் அதிபதி ஆவார்.

8. ராகு தசாம்ச லக்னத்திலிருந்தால் ஜாதகர் தொழிலை மாற்றிக் கொண்டே இருப்பார் அல்லது தொழிலில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வரும் எனலாம்.

9. தசாம்ச லக்னம் வலுவானால் மிக நல்லது. அவ்வாறே தசாம்சத்தின் 10ம் வீடும் 10ம் அதிபனும் வலுவானால் தொழிலில் வெற்றி. மாறாக அசுபத்திலிருந்தால் தொழில் திணறி திணறி செல்லும். தசாம்ச லக்னாதிபதி நிலை முக்கியம்.

10. தசாம்சத்தில் சூரியன் வலுவாக இருந்தால் நிர்வாக திறனுடன் வருமானம் உண்டு. மாறாக சூரியன் கெட்டால் வருமானம் குறைவாகும் மற்றும் அரசு மூலம் தொந்தரவு இருக்கும்.

11. தசாம்சத்தில் சனி வலுவாக இருப்பின் ஜாதகரகளுடன் வேலை செய்பவர்களின் சப்போர்ட் இருக்கும். மாறாக சனி நல்ல நிலையில் இல்லாது போனால் சப்போர்ட்இருக்காது.

12. தசாம்சத்தின் 4ம் வீடு தொழில் மூலம் கிடைக்கும் சந்தோசத்தை குறிக்கும்.

13. 10ம் வீட்டின் அதிபதி, தசாம்ச லக்னாதிபதி மற்றும் தசாம்சத்தில் உச்சமடைந்த கிரகம் மற்றும் பலமான சூரியன் ஆகியன தொழிலில் புரமோசன் கிடைக்க உதவிடும்.

14. தசாம்ச லக்கினம், 2ம் வீடு, 6ம் வீடு, 10ம் வீட்டினை குருபகவான் பார்த்தால் ஜாதகர் தொழிலில் எதாவது தடை அல்லது பிரச்சினை வந்தாலும் இலகுவாக எதிலிருந்து வெளிவந்துவிடுவார். தொழில் போனாலும்கூட அடுத்தமுறை அதைவிட நல்ல தொழில் கிடைக்கும். (ஏற்கனவே கூறியபடி எவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்பது தசாம்ச லக்கினாதிபதி பொறுத்தது.) இவர்களுக்கு தொழில் தொடர்பாக இறை அனுக்கிரகம் இருக்கும், இவர்கள் தொழில் ஸ்தானத்தில் கடவுள் படங்களை வைத்து வழிபட வேண்டும்.

15. தசாம்ச லக்கினாதிபதி, 7ம் அதிபதி, 11ம் அதிபதி இணைந்து 1, 2, 7, 9, 10, 11ம் வீடுகளில் இருந்தால் ஜாதகன் business செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்.

16. தசாம்ச 10ம் அதிபதி அல்லது பத்தில் வக்கிர கிரகம் நின்றால் தொழில் ஸ்திரத்தன்மை இன்றி இருக்கும், மேலும் சனிபகவான் 10இல் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் அடிக்கடி தொழில் (இட)மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. 2, 6, 10இல் ராகு, கேது இருந்தாலும் ஏதேதோ காரணங்களுக்காக உங்கள் தொழில் முன்னேற்றம் தடைபடும். அது பதவியுயர்வாக கூட இருக்கலாம்.

17. தசாம்ச சக்கரத்தில் 3, 8இல் இருக்கும் கிரககங்களின் தொழில்ரீதியாக திசைகள் நன்மை தராது. இருப்பினும் ஜாதகர் புரியும் தொழில், இடம், ஏனைய கிரக தொடர்புகள் பொறுத்து இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. அதேபோல தசாம்ச சக்கரத்தில் 5, 6, 12 இல் இருக்கும் கிரகங்கல் பாவர்களால் பாதிக்கப்பட்டு ராசிச்சக்கரத்தில் குறைந்த கிரணங்களை பெற்றிருந்தால் அவற்றில் தசைபுக்திகளும் ஜாதகருக்கு தொழில் ரீதியாக பாதகமாக அமைந்துவிடும்.

18. தசாம்ச சக்கரத்தின், லக்கினம், அதனைப் பார்க்கும் சுப, அசுப கிரகங்கள் போன்றவற்றைக் கொண்டு, ஜாதகரது உத்தியோகத்தில் அவரின் அணுகுமுறை மற்றும் இயல்பு பற்றி அறிய முடியும். தசாம்ச சக்கரத்தின், லக்கின அதிபதி, எந்த இடத்தில் அமர்கிறாரோ அந்த இடத்தின் காரகத்துப்படி தொழில் அமையும். உதாரணமாக ஒருவரின் லக்கினாதிபதி 6 ஆம் இடத்தில் அமர்ந்திருந்தால், ஜாதகர் ஏதேனும் ஒரு  சேவை செய்யும் தொழிலைச் செய்வார் எனலாம். 

19. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 2ஆம் இடத்தைக் கொண்டு அவர் எந்த மாதிரியான மக்களுடன் வேலை செய்வார் என்பதைப் பற்றியும் அவரின் வேலையை முடிப்பதற்குத் தேவையான ஆதாரம் / வளங்கள் / உபகரணங்கள் போன்றவற்றைப் பற்றியும் கூறும். மேலும், ஜாதகரின் தொழில் சார்ந்த செல்வா நிலை, சமூக அந்தஸ்து மற்றும் பேச்சுத் திறன் போன்றவற்றைத் தெரிவிக்கும்.

20. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 3ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், தமது முயற்சி, படைப்பாற்றல், தகவல் தொடர்பு திறமைகள், ஒப்பந்தங்கள் மற்றும் சிறுசிறு தடைகள் போன்றவற்றைக் கூறும். மேலும் இதன் அதிபதி மூலம், சிறு தூரப் பயணம் பற்றியும் கூறும். 

21. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 4ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவரது உத்தியோகத்தில் / தொழிலில் அவர் பெறும் மகிழ்ச்சி, சூழல் / சுற்றுப்புறம் போன்றவற்றைப் பற்றி அறியலாம். மேலும் இதன் மூலம் ஜாதகரின் பிறந்த நேரத்தைச் சரிப்படுத்த உதவும். 

22. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 5ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், வியாபாரத்தில்/ தொழிலில் அவரிடம் வேலை செய்யும் ஊழியர்கள், அவரின் புகழ் மற்றும் அவர் இடும் கட்டளைகளை அவரின் கீழ் பணி புரியும் மற்றவர்கள் பின்பற்றுவது பற்றியும் கூறும்.

23. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 6ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், செய்யும் சேவையைப் பற்றியோ அல்லது அந்த சேவைக்குத் துணை புரிபவர்கள் பற்றியோ அறிய உதவும். பொதுவாக , ஒருவருடைய ஜாதகத்தில் 2, 6, 10ஆம் இடங்கள் அவருடைய இயல்பான வேலை என்னவென குறிகாட்டும். ஆனால், திரைப்படத்துறை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு 3, 7, 11ஆம் இடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

24. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 7ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவருடன் பணிபுரிபவர்களுடன் ஆன தொடர்பு / பழக்க வழக்கங்கள் பற்றி அறிய முடியும். இதில், சுபக் கிரகம் இடம் பெற்றால், மிகவும் சுலபமான / சந்தோஷமான வாழ்க்கை அமையப்பெறுவார். உதாரணமாக, இங்கு சுக்கிரன் / சந்திரன் போன்ற கிரக அமர்வு, ஜாதகரை நிறைய பெண்கள் கூட்டத்திற்குள் வேலை செய்ய வேண்டி வரும். உதாரணம் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் இடம் போன்றவை. 

25. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 8ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவர் தொழிலில் / வேலையில் ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி அறிய உதவும். இந்த இடம் நீண்ட நாள் வேலை இழப்பைப் பற்றியும் தெரியப்படுத்தும். 

26. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 9ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவரின் மேல் அதிகாரி உடனான உறவை / தொடர்பை வெளிப்படுத்தும். ஒருவரின் ஜாதகத்தில் 9 ஆம் அதிபதியே மேலதிகாரி . ஒரு ஜாதகத்தில் லக்கின அதிபதி 9ஆம் இடத்தில் அமர்ந்தால், அந்த ஜாதகருக்கு அவரே மேல் அதிகாரி, அதாவது அவரை யாரும் தட்டி கேட்க முடியாது, ஏன் எனில் அவரே மேலதிகாரி ஆவதால், அவர் தனித்து இயங்க முடியும். இங்கு, 7ஆம் அதிபதியின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்ளுதல் அவசியம்.

27. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 10ஆம் இடத்தைக் கொண்டு ஒருவரின் கர்ம வினையைப் பற்றிக் கூறும். அதாவது இந்த ஜாதகர் போன பிறவியில் செய்த கர்மாவைப் பற்றியும் இந்த பிறவியில் அவர் படும் பாட்டைப் பற்றியும் தெரியப்படுத்தும். அதோடு அவரின் தொழில் / வேலை எந்த வகையில் அமையும் என்பதனை தெளிவுபடுத்தும். 

28. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 11ஆம் இடத்தைக் கொண்டு ஒருவரின் தொழிலுக்கு, நண்பர்களைப்போல் மற்றவர்கள் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்பதனை எடுத்துரைக்கும்.

29. தசாம்ச சக்கரத்தின், லக்கினத்திற்கு 12ஆம் இடத்தைக் கொண்டு ஒருவரின் வேலை நிமித்தமாக வெளியூர் / வெளிதேச வாடிக்கையாளர் / விற்பனை போன்றவற்றை அறியலாம். 

30. அனைத்திற்கும் முக்கியமாக ராசிச்சக்கரத்தில் உள்ள யோகி மற்றும் சுபத்தன்மை அதிகம் கொண்ட கிரகம் வர்கச்சக்கரத்தில் நல்லநிலையில் இருக்க வேண்டும். இதில் எந்த கிரகமும் 3/ 6/ 8/ 12ல் மறையகூடாது மற்றும் கெடகூடாது. காரக கிரகம் அது தொடர்பான வர்க்க லக்னத்தில் நிற்ககூடாது என்றதொரு விதி உள்ளது. அதாவது தசாம்சத்தினை பொறுத்தவரை லக்கினத்தில் சனி நிற்க கூடாது.

இந்த வர்க்க சக்கரங்களைப் பயன்படுத்தி ஜோதிட மூலநூல்களின் வழி மென்மேலும் பல ஜாதகங்களை ஆய்வு செய்து மேலும் புதிய தகவல்களை அறிந்து இந்த மானிட சமுதாயம் நல் வாழ்வு வாழ வழி செய்ய தற்போதுள்ள இளைய ஜோதிடர்களைக் கேட்டு வேண்டுகிறேன்.


தசாம்சம் போடுவதற்கென தனியான கணித்தல் முறைகள் உள்ளன. எனினும் ஜோதிட ஆர்வலர்கள் இலகுவாக தசாம்சம் போட்டுக்கொள்ள இந்த அட்டவணை உபயோகமாக இருக்கும்... இதனை பயன்படுத்தி இலகுவாக தசாம்ச சக்கரத்தில் கிரகங்களை வரைந்துவிடலாம்...

[Ari - மேஷம், Tau - ரிஷபம், Gem - மிதுனம் _______ Pis - மீனம்.. என எடுத்துக்கொள்க.]

GHT

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 கருத்துகள்:

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.