ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

வியாழன், 1 அக்டோபர், 2020

பாரம்பரிய ஜோதிட பதிவுகள் செய்வோரின் கவனத்திற்கு !!!

பாரம்பரிய ஜோதிட பதிவுகள் செய்வோர் உங்கள் பாரம்பரிய ஜோதிட பதிவுகளுக்கு மூலநூல் ஆதாரம் கொடுத்து பதிவு செய்யுங்கள். உதாரணமாக உங்கள் இந்த ஜோதிட கருத்து எந்த ஜோதிட மூலநூலின் தகவல் என்று... ஜோதிடத்தினை வகுத்தவர்களால் எமக்காக எழுதப்பட்ட ஜோதிட மூலநூல்களிற்கும் தற்போதைய 20ம் மற்றும் 21ம் நூற்றாண்டில் வியாபார நோக்கிலும் புகழ்பெறும் நோக்கிலும் எழுதப்பட்ட ஜோதிட நூல்களையும் வேறுபடுத்தி அறியுங்கள். ஜோதிட புத்தகங்கள் லட்சசக்கணக்கில் கடைகளில் இருக்கும். ஜோதிட மூலநூல்கள் வையகத்தில் சொற்பமே உள்ளன. மூல நூல்கள் என்பன காலத்திற்கு அப்பாற்பட்டு ஜோதிட ரிஷிகளால், முனிவர்களால் அருளப்பட்ட நூல்களாகும். உதாரணமாக பராசர ஹோரா, பிருகத் ஜாதகம், பலதீபிகை, புலிப்பாணி ஜோதிடம்,  ஜம்பு மகரிஷி வாக்கியம், சினேந்திரமாலை, ஜாதக பாரிசாதம், சாராவளி, உத்திரகாலாம்ருதம் போன்றவற்றை சில உதாரணமாக கூறலாம், இன்னும் ஜோதிட மூலநூல்கள் நிறைய உண்டு. இவைகளே ஜோதிட மூலநூல்கள் ஆகும். (பூர்வபராச்சர்யம் மற்றும் ஜாதக அலங்காரம் என்பன ஒரு தனியான ஜோதிட மூலநூல் அல்ல. இவை ஏற்கனவே இருந்த பல ஜோதிட மூலநூல்களில் இருந்து கருத்துக்களை எடுத்து அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு நூலாக்கப்பட்டுள்ளது. அதாவது இது சில குறிப்பிட்ட மூலநூல்களில் இருந்து சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் எடுத்து தொகுக்கப்பட்ட நூலாகும். எனவே இதனைக்கூட நீங்கள் மூலநூல் ஆதாரமாக பயன்படுத்த முடியும்.) 

பாரம்பரிய ஜோதிட பதிவுகள் செய்யும் அனைவரும் உங்கள் பாரம்பரிய ஜோதிட பதிவின் அடியில் உங்கள் கருத்து இடம்பெற்ற ஜோதிட மூலநூலின் பெயரை கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்; இயலும் என்றால் அத்தியாயம் மற்றும் சுலோகங்களையும் குறிப்பிட்டால் ஜோதிட மாணவர்களிற்கும் ஜோதிட விரும்பிகளுக்கும் உதவிகரமாக இருக்கும். ஒருவேளை நீங்கள் பதிவிடும் பதிவானது  உங்கள் சொந்த அனுபவ கருத்து என்றால் குறைந்த பட்ச்சம் 100 ஜாதகத்திலேனும் பொருத்தி பார்த்து அது சரியாக வந்தால் மட்டுமே சபையில் பதிவிட்டு ஜோதிட அறிஞர்களின் கருத்துக்களையும் திருத்தங்களையும் ஏற்று, பின் செப்பமிட்ட பின்னரே அதனை ஜோதிட பதிவாக பதிய அனுமதி வழங்கப்படும். இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் தயாரித்து அமுல்படுத்தப்படும். தவறான ஜோதிட பதிவுகளை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த செயல்முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. ஜோதிட மூலநூல்கள் தவிர வேறு தற்போதைய ஜோதிட ஆசிரியர்கள் இயற்றிய விதிகளை மேற்கோள் காட்டி பாரம்பரிய பதிவுகள் பதிய முடியாது. ஜோதிட மாணவர்களும் தற்போது கடைகளில் கிடைக்கும் தேவையற்ற ஜோதிட நூல்களை எடுத்து படிக்காமல் 2-3 மூலநூல்களை எடுத்து படியுங்கள். அதில் எதாவது ஒன்றில் உங்களை செதுக்கிக்கொள்ளுங்கள்.  பராசர ஹோராவினை அடிப்படையாக வைத்துக்கொண்டு பலதீபிகை அல்லது பிருகத் ஜாதகம் இதில் எதாவது ஒன்றை உங்கள் ஆதாரமாக எடுத்து ஜோதிட அனுபவங்களை ஜாதகங்கள் வாயிலாக பெற்று உங்கள் ஜோதிட திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். ஜோதிட மூலநூல்களில் இல்லாத விஷயங்களே இல்லை. ஜோதிடம் பற்றி ஏதும் அறியாதவன் கூட மிகப்பெரிய ஜோதிட கணிதனாக மாற்றும் அனைத்து நுட்பங்களையும், ஜோதிட விதிகளையும் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக கூறவேண்டும் என்றால் ஏற்கனவே நான் கூறிய பிருகத் பராசர ஹோரா, பிருகத் ஜாதகம், பலதீபிகை என்பவற்றை சொல்லலாம். மேலும் அடுத்தபடியாக உத்திரகாலாம்ருதம், பூர்வ பராச்சர்யம் மற்றும் ஜம்பு மகரிஷி வாக்கியம் என்பனவும் எப்படி ஒரு ஜாதகத்தினை அணுக வேண்டும் என்று அழகாக எடுத்து சொல்கின்றன. ஜாதக பாரிசாத ஜோதிட விதிகளை நாம் கண்ணை மூடிக்கொண்டு ஜாதகத்தில் பொருத்தி பார்த்து கூறும் பலன் அப்படியே பலிக்கும்! கூறப்போனால் இன்று தற்காலத்தில் ஜோதிட நூல்கள் எழுதுபவர்கள் அனைவரும் ஜோதிட மூலநூல்களில் இருந்தே கருத்துக்களை எடுத்து தமது மொழிநடையில் எழுதுவதோடு சற்று கூட்டி குறைத்து அனுபவங்களையும் சேர்த்து எழுதுகின்றனர். ஆனால் 95% விழுக்காடு புத்தகம் எழுதுபவர்கள் முழுமையற்றதாக எழுதுகின்றனர். பலர் ஜோதிட கருத்துக்களை தாம் தவறாக புரிந்துகொண்டு அதனை சரியாக புத்தகத்தில் எழுதி அதனை படிப்பவர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்றுவிடுகின்றனர். எனவே ஜோதிட மூலநூல்களை மட்டுமே நம்பி இருங்கள். அதுவே ஜோதிட ரிஷிகளின் ஆசி.

பாரம்பரிய ஜோதிடத்திற்கு வேத ஜோதிடம் என்றும் ஒரு பெயர் உள்ளது. அதாவது வேதங்களிற்கு இணையாக மெஞ்ஞானம் கொண்டு (விஞ்ஞானம் அல்ல!) ஆன்மீக அருளோடு அறியப்பட வேண்டிய சாஸ்திரம் இது. ஜோதிட ஆர்வலர்கள், ஜோதிட மாணவர்களே, இளநிலை ஜோதிடர்கள், ஜோதிட ஆசான்களே உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், தேன்போன்ற சுவை தரும் நிஜ மாம்பழம் இருக்க இலவம் காய்களை நம்பிக்கொண்டு இருக்காதீர்கள். ஜோதிட மூலநூல்கள் இருக்கு வேறு எந்தவொரு நூல்களும் தேவையில்லை. ஜோதிட மூலநூல்கள் கொண்டு ஜோதிட புலமை பெற்றவன் மட்டுமே பாரம்பரிய ஜோதிடத்தில் முழுமையான வெற்றியாளனான ஜோதிடனாக திகழ முடியும் என்பது சான்றோரின் ஆணித்தரமான கருத்தாகும்.



 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.