1. சிலம்பம் உருவான வரலாறு :
மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ள சிவமுனிவரான அகத்தியரால் உருவாக்கப்பட்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது.
தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர்.
தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது.
மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும்.
சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப்படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன.
சிலம்பாட்ட வகைகள் :
· துடுக்காண்டம்
· குறவஞ்சி
· மறக்காணம்
· அலங்காரச் சிலம்பம்
· போர்ச் சிலம்பம்
· பனையேறி மல்லு
· நாகதாளி,
· நாகசீறல்,
· கள்ளன்கம்பு
2. களரி வரலாறு :
களரிப்பயட்டு எனப்படும் சொல்லானது பழந்தமிழ் வார்த்தைகளான களரி + பயிற்று ஆகிய இரு சொற்களின் சேர்க்கையாகும்.
களரி என்பது களத்தைக்(field) குறிக்கும், பயிற்று என்பது பயிற்சி(practice)யைக் குறிக்கும். பிற்காலத்தில் இது திரிந்து களரிப்பயட்டு என மாற்றம் கண்டது.
களரி எனும் கலையானது அப்போதைய சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் ஆட்சிப்பிரதேசங்கள் அதாவது தற்போதைய தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களில் மிகவும் சரளமாக பழக்கப்பட்டது.
சங்கப்பாடல்களான அகநானுறு மற்றும் புறநானூறு பாடல்களில் களரி குறித்து பாடப்பட்டுள்ளதுவே இதற்கான சான்றாகும்.
சங்ககால மன்னர்களின் படைவீரர்களுக்கு களரி பயிற்சி தரப்பட்டுள்ளது. கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கமாக மூவேந்தர்களிடையே ஏற்பட்ட பல போர்களின் நிமித்தமாக களரியின் தேவை அதிகரித்து களரி பயிற்சியில் பல நுணுக்கமான விடயங்கள் உட்சேர்க்கப்பட்டன.
பண்டைக்காலத்தில் களரிக்கான போதனைக்கூடமாக விளங்கியவை சாலைகள். இச் சாலைகளுக்கு தலைமை ஏற்றவர்கள் பட்டதிரி எனப்பட்டனர். மாணவர்கள் சட்டர்கள் எனப்பட்டனர்.
இந்த சாலைகளுக்கு அரசர்கள் நிலங்களை தானமாக வழங்கினர். அதற்கு பிரதிபலனாக சாலைகள் திறமையான சட்டர்களை பயிற்றுவித்து மன்னருக்கு வழங்கவேண்டும்.
கி.பி 7 ம் நூற்றாண்டில் இருந்து 9 ம் நூற்றாண்டு வரையில் பாண்டியர்களின் தாக்குதல்களால் சேர மன்னர்களான சேரமான் பெருமாள்களின் ஆதிக்கம் கேரளாவில் குறைந்த வண்ணம் வந்தது. இத்தருணத்தில் கேரளாவில் சிற்றரசர்களாக இருந்த நாடுவாழிகள் தனிப்படைகளை பணிக்கு அமர்த்திக்கொண்டனர்.
இந்த தனிப்படைகளுக்கான போர்ப்பயிற்சியாக களரிப்பயட்டு போதிக்கப்பட்டது. சிற்றரசர்கள் மிகுதியாக இருந்தபடியால் சாலைகளுக்கு கிடைத்த சாலாபோகங்கள் அதிகரித்து வந்தன.
ஒரு சாலை இன்னொரு சாலையை விட சிறப்பாக செயலாற்றவேண்டி பல புதிய தாக்குதல் முறைகளை கண்டறிந்தனர். இதுவே களரிப்பயட்டின் பொற்காலம் என நோக்கப்படுகிறது.
களரிப்பயட்டு நான்கு பகுதிகளாக பிரிக்கப்படும். அவற்றில் முதல் பயிற்சி முறை மெய்ப்பயட்டு எனப்படும். இதுவும் ஒரு வகை தயாராகும் (warm up) பயிற்சி தான். ஒரு சந்தத்தில் அமைந்த பல சிறிய உடலசைவு முறைகளை ஒன்றாக்கி மெய்ப்பயட்டு உருவாக்கப்பட்டுள்ளது. தினசரி பயிற்சிகளுக்கு முன்பாக இந்த மெய்ப்பயட்டு பயிற்சி கட்டாயம் மேற்கொள்ளப்படும். இது உடலின் தசைகளுக்கு இளக்கத்தை தருவதால் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட முடியும்.
இரண்டாவது நிலை கோல்தாரி பயட்டு எனப்படும். இங்கு மரத்தால் ஆன ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். சரீரவடி எனப்படும் ஆளுயர மூங்கில் கம்பும், செறுவடி எனப்படும் சிறிய தடியும் முக்கியமான கருவிகளாக இருக்கும். பண்டைய தமிழ் கலையான சிலம்பாட்டதிற்கு இணையாக இதனை வரையறுக்கலாம். மேலும் இந்நிலையில் வாய்ப்பயட்டு எனப்படும் சொற்கட்டளை பயிற்சியும் வழங்கப்படும். இதில் கெட்டுகாரி எனப்படும் கட்டளை தொகுப்புகள் எவ்வாறு கூறப்படும் என்பது கற்பிக்கப்படும்.
மூன்றாவது நிலை அங்கத்தாரி பயட்டு/ஆயுத்தப்பயட்டு எனப்படும். வெட்டும் முனைகளை கொண்ட கூரிய உலோக ஆயுதங்களை பயன்படுத்தும் பயிற்சிகள் இதன்போது வழங்கப்படும். ஈட்டி, வாலும் கேடயமும், வேல், சுருள் கத்தியான உறுமி, கதை, கட்டாரி, கொம்பு வடிவிலான ஓட்டம், உலோக பூமரேங்கான வளரி மற்றும் குந்தம் என ஆபத்தான பல ஆயுதங்களை பயன்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படும்.
இறுதியாக வெறுங்கை எனும் ஆயுதம் அல்லாத சண்டைப்பயிற்சி வழங்கப்படும். வர்ம தாக்குதல் முதலிய விசேட தாக்குதல் முறைகள் இதில் பயிற்றுவிக்கப்படும். தாக்குதல் முறைகளின் போது ஒருவர் நிற்கும் நிலை (posture) வடிவு எனப்படும். இந்த வடிவு முறைகள், இயற்கையில் விலங்குகள் நிற்கும் முறையைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.
சிம்ஹ(சிங்க) வடிவு, கஜ(யானை) வடிவு, அசுவ(குதிரை) வடிவு, சர்ப்ப(பாம்பு) வடிவு, மயூர(மயில்) வடிவு என பல நிற்றல் நிலைகள் உண்டு.
வடக்கன் - தெற்கன் : களரி கலையைப் பொறுத்தமட்டில் அவற்றின் பிரத்யோக முறைகளைக் கொண்டு இரு வகையாகப் பிரிக்கலாம். அவை,
1. வடக்கத்திய முறை களரி
2. தெற்கத்திய முறை களரி
வடக்கத்திய முறை களரி :
வடக்கத்தியமுறை களரி எல்லாம் வல்ல அந்த பரமசிவனின் சீடனான பரசுராமர் அருளிய களரி முறை. ஆயுதப்பயட்டு இம்முறையில் முதன்மை பெறுகிறது.
வடக்கத்திய முறையில் பயிற்சி பெறுபவர்கள் வாள்பயட்டிலும், உறுமி எனப்படும் சுருள்வாள் வீசுதலிலும் அதிகம் திறன் பெறுவார்கள்.
போர்வீரர்களாக பயிற்சி பெறுவோருக்கு வடக்கன் முறையே போதிக்கப்பட்டது. மலபார் உள்ளிட்ட வட கேரளாவில் இது பிரசித்தமானது.
தெற்கத்திய முறை களரி :
தெற்கத்திய முறையானது எல்லாம் வல்ல அந்த பரமசிவனின் அன்பு பெற்ற முனிவரான அகத்தியரால் உருவாக்கப்பட்டது.
இவரே சிலம்பத்தையும், வர்மத்தையும் உலகிற்கு தந்தார்.
தெற்கத்திய முறையில் வெறுங்கை அல்லது அங்கைப்பயட்டு எனப்படும் ஆயுதமில்லாத தாக்குதல்கள் இங்கு முதன்மையானது.
படுவர்மம், தொடுவர்மம், நோக்குவர்மம், தட்டுவர்மம், நுனிவர்மம் மெய்தீண்டா வர்மம் முதலிய வர்மதாக்குதல்கள் தெற்கத்திய முறையின் சிறப்பு.
தெற்கத்தியமுறை போர்க்குரியதாக இல்லாது ஒரு தற்காப்பு கலையாக காணப்படுகிறது. மேலும் வர்மம் தாக்குதல் முறையாக மட்டுமில்லாது சிகிச்சை முறையாகவும் உள்ளது.
சிலம்பம் மற்றும் களரி முறைகளில் தேர்ச்சிபெற்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த சைவ மன்னனான போதிதர்மன் சீனாவுக்குச் சென்று Shaolin Kungfu அடித்தளத்தை அமைத்தார். சீனாவில் புத்தமதம் நிலவியதால் தம்மையும் அவர்களுடன் இணைத்து புத்த மதத்தினை ஏற்றார்க்கொண்டார்
எனக்கூறப்படுகிறது. பிரசித்தமான குங்பூ முறைகளாக Animal Styles: Dragon, the Snake, the Tiger, the Leopard and the Crane, Wing Chun, Tai Chi என்பன அடங்குகின்றன. சிவசிவ