ராசிப்படி மேற்கண்ட கிரகங்களுக்கான கற்களை ஒருவர் அணிவதாக வைத்துக் கொண்டால், தனக்கு கெடுதல் செய்யும் அஷ்டமாதிபதியை ராசிநாதனாக கொண்டவர் ராசிப்படி கல் அணியலாமா?
உதாரணமாக விருச்சிக லக்னம் மிதுனராசியில் பிறந்தவர் மரகதப் பச்சையை மோதிரமாகக் கொள்ளலாமா? கன்னி லக்னம் மேஷராசியில் பிறந்த ஒருவர் பவளத்தை அணியலாமா?
ராசிப்படி ஒருவர் ராசிக்கல் அணிவது முற்றிலும் தவறு.ராசிநாதன் அவரது லக்னப்படி பாதகாதிபதியாகவோ, ஜாதகருக்கு லக்னப்படி தீமை செய்யும் பகைக்கிரகமாகவோ இருந்தால் கற்கள் அணிந்தவுடன் கெடுதல்கள் நடக்கும். சிலர் இந்த மோதிரம் போட்டதிலிருந்து எனக்கு தலை வலிக்கிறது. அன்றே வண்டியிலிருந்து கீழே விழுந்துவிட்டேன் என்று சொல்லுவது இதனால்தான்.
ஒருவரின் பிறந்த ஜாதகம் ஒரு முழுமையான ஜோதிடரால் தீர்க்கமாக ஆராயப்பட்டு லக்னமோ, லக்னாதிபதியோ பலவீனம் அடைந்திருந்தால் லக்னாதிபதியை வலுவாக்கும் விதமாக அந்தக் கிரகத்தின் வலுவைக் கூட்டும் விதமாக லக்னாதிபதியின் ரத்தினத்தை வாழ்நாள் முழுவதும் வலது கை மோதிர விரலில் அணிய வேண்டும்.
லக்னாதிபதிக்கு ஆறு, எட்டு என மறு ஆதிபத்தியம் இருந்தால் லக்னாதிபதி இருக்கும் இடம், மற்றும் அவரது மூலத்திரிகோணாதிபத்தியம் ஆகியவற்றை வைத்து முடிவெடுக்க வேண்டும்
ஒருவருக்கு நன்மை தரும் கிரகம் பலவீனம் அடைந்து (5,9 போன்ற யோகாதிபதிகள்) அவர்களுடைய தசையும் நடக்குமானால் அந்தக்கிரகத்தின் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள அந்தக் கிரகத்திற்குரிய ரத்தினத்தை வலதுகை ஆட்காட்டி விரலில் அணியலாம்.
தீமை தரும் கிரகத்தின் ராசிக்கல்லை எந்தக் காரணம் கொண்டும் அணியக்கூடாது. ராசிக்கல் என்பது ஒரு கிரகத்தின் வலிமையை அதிகப்படுத்துவதற்காக மட்டுமே. கெடுதல் செய்ய விதிக்கப்பட்ட கிரகக் கல்லை அணிந்தால் அந்தக் கிரகத்தின் வலிமை அதிகமாகி இன்னும் அதிகமான தீமைகளைச் செய்யும். கல்லை அணிவதால் கெட்டகிரகம் நன்மை செய்யும் என்பது தவறு.
அதேபோல நவரத்னங்கள் ஒன்பதுதான். ஆனால் அவற்றுள் ஏராளமான வகைகள் உள்ளன. உதாரணமாக புஷ்பராகத்தில் பத்மபுஷ்பராகம், நீலத்தில் இந்திர நீலம் என நிறைய வகைகள் உண்டு. ஒரு தேர்ந்த முழுமையான ஜோதிடரால் மட்டுமே இவர் நீலம் அணியலாமா அல்லது இந்திரநீலம் வேண்டுமா என துல்லியமாக கணிக்க முடியும்.
6,8க்குடையவர்களின் ராசிக்கல்லை கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது. பாதகாதிபதியின் ராசிக்கல்லும் அப்படியே... (பாதகாதிபதி ராசிநாதனாக வந்தாலும்அணியக் கூடாது)
ராகுகேதுக்களின் தசை நடக்கும் போது அவர்கள் இருந்த ராசியின் அதிபதி லக்னசுபராகி அவர் வலிமை குறைந்திருந்தால், அந்த ராகு,கேதுக்கள் இருக்கும் ராசிக்கு அதிபதியின் கல்லை அணியலாம்.
ராகு,கேதுக்கள் 3,11ல் இருந்தால் மட்டுமே அவர்களின் ராசிக்கற்களை இடது கையில் அணியலாம். அல்லது அவர்கள் லக்ன சுபரின் வேறு வீட்டில் இருந்தால் அணியலாம். உதாரணமாக மிதுன லக்னத்திற்கு 12ல் ரிஷபத்தில் ராகு இருந்தால் கோமேதகம் அணியலாம்.
கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற அதாவது கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்ற குருவும், புதனும் எந்த பாபர் பார்வையும், சேர்க்கையும் இல்லாமல் தனித்து இருக்கும் நிலையில் அவர்களின் ரத்தினங்களை அணியக் கூடாது. (லக்னம் கேந்திரத்திற்கும், திரிகோணத்திற்கும் பொதுவானது. லக்னத்தில் இவர்கள் இருந்தால் தோஷம் இல்லை.)
மிதுன, கன்னி, ரிஷபம், துலாம், மகரம், கும்பம்லக்னக்காரர்கள் ராசிக்கல்லை வெள்ளியில் அணிய வேண்டும். கடக லக்னக்காரர்கள் ராசிக்கல்லை பஞ்சலோகத்தில் அணியலாம். தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்ம லக்னக்காரர்கள் பஞ்சலோகம் மற்றும் தங்கத்தில் அணியலாம்.
சில அனுபவமற்ற ஜோதிடர்கள் ஒரே மோதிரத்தில் ராகுவிற்குரிய கோமேதகம் மற்றும் கேதுவிற்குரிய வைடூரியத்தையும் சேர்த்து அணியச் சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறு.
ராகுவும் கேதுவும் வடதுருவம் தென்துருவம் போன்றவை. ஒன்றுக்கொன்று 180 டிகிரியில் நேர்எதிராகச் சுற்றி வருபவை. ராகுகேதுக்களில் ஒன்று நன்மை தரும் அமைப்பில் இருந்தால் இன்னொன்று அதற்கு எதிரான நிலையில் இருக்கும். ஒரு ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோதான் தோஷம் தரும். இரண்டும் சேர்ந்து அல்ல. இணையவே முடியாத இரு துருவங்களை அருகருகே வைத்து இணைத்து ஒரே மோதிரத்தில் அணிவது மகாதோஷம்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது.
ரத்தினங்களை கடையில் வாங்கி அப்படியே அணியக் கூடாது.
அவைகளை அணியப் போகிறவரின் பெயர், ராசி, நட்சத்திரப்படியும் என்ன நோக்கத்திற்காக அவர் அணியப் போகிறாரோ அதன்படியும் உச்சாடனம் செய்து உருவேற்றிய பின்பே அது மோதிரமாக அணியப்பட வேண்டும். குறைந்தது ஒரு லட்சத்து எட்டு முறை உச்சாடனம் செய்வது நல்லது.
சூரியனுக்கு | மாணிக்கம் |
சந்திரனுக்கு | முத்து |
செவ்வாய்க்கு | பவளம் |
புதனுக்கு | மரகதம் |
குருவிற்கு | புஷ்பராகம் |
சுக்கிரனுக்கு | வைரம் |
சனிக்கு | நீலம் |
ராகுவிற்கு | கோமேதகம் |
கேதுவிற்கு | வைடூரியம் |