அனைவருக்கும் வணக்கம்.
தந்தைகாரகன் சூரியன், தாய்காரகன் சந்திரன். ஒருவரிற்கு ஒருதாய்தந்தை மட்டுமே இருக்க முடியும். ஆகவே சூர்யசந்திரர்க்கு மட்டும் ஒருவீடு என்று சிலரால் கூறப்படுகிறது. இங்கு தாய், தந்தை எனும் அந்தஸ்து பெறும் கிரக காரகத்திற்கும் அவர்கள் உரிமைபெறும் ராசிகளிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை... இதுபோன்ற மேலோட்டமான கருத்துக்களையும் கிரகங்கள் இரு வீடு பெற்ற கதைகளையும் கேட்டிருப்போம்... ஆனால் எனது இந்த பதிவிலுள்ள எண்ணங்களானது வானவியலை அடிப்படையாக கொண்டு உண்மையான காரணத்தை அறிய வேண்டிய முயற்சியின் தேடலாக அமைகிறது...
ஒளிகிரகங்களான சூரியன், சந்திரனிற்கு தலா ஒரு வீடுகள். ஏனைய தாராகிரகங்கள் எனப்படும் புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி சுயமாக ஒளிர்வதில்லை. இவை சூரியனின் ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கின்றன... வானவெளியில் உள்ள பல கிரகங்களிற்கு உபகோள்கள் உள்ளன. அதில் நாம் வசிக்கும் புவியின் உபகோளான சந்திரன் புவிக்கு மிக அருகில் உள்ளது. இதன் ஒளி எனும் கதிர்வீச்சு மனிதர்களிலும் கடல், தாவரம், சமநிலை என புவியின் பல்தரப்பட்ட வஸ்துக்களிலும் செல்வாக்கு செலுத்துகிறது என்பது ஜோதிடத்தை ஏற்றுக்கொள்ளாத மனிதர்கள் கூட அறிவர்... எனவே பூமியில் வசிக்கும் நாம் கிரககதிர்வீச்சு என பார்க்கும்போது சூரியனை அடுத்து சந்திரனே முக்கியத்துவம் உடையதாக உள்ளது. அவ்வாறான சந்திரன் சூரியஒளியில் (மட்டும்) ஒளிர்கிறது.

நேரடியான ஆளுகைக்குட்படாமையால் ஏனைய கிரகங்களின் உபகோள்களிற்கு ஜோதிடத்தை பொருத்தவரை சொந்தவீடுகள் ஒதுக்கப்படவில்லை. ராகுகேதுக்கள் உண்மையில் நாம் நினைப்பதுபோல தொட்டு உணரக்கூடிய திடமான (பருப்பொருளான) கிரகங்கள் அல்ல. அவை சூரியசந்திரரின் நிழல்கள். ஒளியை முன்னிறுத்து பார்க்கும்போது ராகுகேதுக்கள் சூரிய அல்லது சந்திர ஒளியை பிரதிபலிப்பதில்லை. ஆகவே அவைகளிற்கு சொந்தவீடுகள் ஒதுக்கப்படவில்லை. நிழல் கிரகங்கள் எனும் ரா/கே இருள் எனும் விரும்பத்தகாத இயல்பால் ஜாதகரை பாதிக்கிறது. ஒரு எளிய உதாரணமாக கடவுள் எனும் ஒளி இருக்கும் இடத்தில் தீயசக்தி(பேய்பிசாசு) எனும் இருள் இருப்பதில்லை. இதனை கடவுள் எனும் ஒளி இல்லாத இடத்தில் தீயசக்தி எனும் இருள் இருக்கும் என அறியலாம். இதுவே ராகுகேது பலன்தரும் முறையாகும். எனவேதான் ஒளிகிரகங்களான சூரிய சந்திரர்க்கு இருளெனும் இவை கடும் பகையாக கருதப்படுகிறது... சிலரிற்கு பகல் உத்தமம், சிலரிற்கு இருளே உத்தமம் என்ற அடிப்படையில் ரா/கே நன்மை தரும் அமைப்பில் உள்ள போது நன்மைசெய்துவிடுகிறது... ராகுகேது பற்றி மேலும் விபரித்தோமேயானால் அது இக்கட்டுரையின் தலைப்பை திசைமாற்றகூடும் என்பதனால் இத்துடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்...
ஜோதிடத்தை பொறுத்தவரை திருவருளும் குருவருளும் கைகூடி சிறிது நேரமெடுத்து சிந்தித்தோமானால் பல அற்புதமான விளக்கங்களும் குழப்பங்களும்? (அதற்கு தீர்வுகளும்) வருவதாலேயே ஜோதிடம் கடலாக உள்ளது போலும்... பதிவை படித்து சுவைத்த நண்பர்களிற்கு நன்றி...
உங்கள் ஜாதகம் பார்க்க தொடர்புகொள்ளுங்கள் - hariram1by9@gmail.com
இவன்;
ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக