தீய வழியில் சென்றவர்களை மீட்டெடுக்க உதவும் சிறப்பு மிக்க எளிய விரதம் தெரியுமா?
வாழ்வில் சிலர் தவறான நெறிகளில் சென்று தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் நிம்மதியின்றி செய்துவிடுகின்றனர். எப்படியும் வாழலாம் என்ற கோட்பாடு எத்தகைய பிரச்சனைகளை தரும் என்பது பலருக்கு புரிவதில்லை. இறை நெறியில் மன தூய்மையுடன் வாழ்பவர்கள் எந்த துன்பம் வந்தாலும் அதனை திறம்பட சமாளிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
நல்லது செய்தாலும், கெட்டது செய்தாலும் அவரவர் கர்ம வினைப்படி பலன்களை அனுபவித்து கொண்டு தான் இருப்பார்கள்
. அதில் தவறான பாதையில் சென்று வாழ்க்கையை தொலைப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த சிறப்பு மிக்க விரதம் மேற்கொள்வதால் நீங்கள் நினைக்கும் நபர் புதிய வாழ்வு பெறுவார்கள். இந்த விரதத்திற்கு என்ன பெயர்?
எப்படி விரதம் மேற்கொள்வது? என்னென்ன பலன்களை பெறலாம் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்
. இந்த விரதத்திற்கு ஜெய பார்வதி விரதம் என்று பெயர். அன்னையை நினைத்து வேண்டி விரதமிருந்து வழிபடும் ஒரு எளிய விரதமாகும். இந்த விரதம் மேற்கொள்வதற்கு சுமங்கலிப்பெண்கள் ஐவர் வேண்டும். சுமங்கலிப் பெண்கள் அனைவரும் கூடி விரதமிருக்கும் முந்தையநாள் ஆலயத்திற்கு சென்று அன்னை துர்க்கையும், லக்ஷ்மி தேவியையும் வணங்கி விட்டு இந்த விரதத்தில் பலன்கள் முழுவதையும் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக உறுதி ஏற்க வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒரு தேங்காயை எடுத்துக் கொண்டு அதற்கு மஞ்சள், சந்தனம் இட்டு, வலக்கை மோதிர விரலால் குங்குமமிட்டு அன்னையின் பாதங்களில் வைத்து வணங்கி அந்தத் தேங்காயை வீட்டிற்கு எடுத்து வைத்துக் கொண்டு வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் காலையில் குளித்து விட்டு நல்ல பருத்தி உடையை உடுத்தி உணவேதும் அருந்தாமல் பூஜை அறையில் உள்ள தேங்காயை தொட்டு வணங்கி விளக்கேற்றி தூப தீபம் காட்டி விட்டு விரதத்தை துவங்கவேண்டும். விரதம் முடியும் வரை மௌன விரதம் மேற்கொண்டால் கூடுதல் சிறப்பு. -
ஓம் ஜெய் துர்கா பத்ம நிவாஸினி! ஓம் ஜெய் லக்ஷ்மி பத்ம நிவாஸினி! இந்த மந்திரத்தை அன்றைய நாள் முழுவதும் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் அவரவர் இல்லத்தில் தங்களுடைய அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம். சூரிய பகவான் மறையும் நேரத்தில் இந்த ஐந்து பெண்களும் கோவிலுக்கு சென்றோ அல்லது யாராவது ஒருவர் வீட்டிலோ பூஜை அறையில் சுற்றி உட்கார்ந்து அந்தத் தேங்காயை சேலையில் முடிந்து கொண்டு மடியில் கட்டிக் கொள்ள வேண்டும்.
நடுவில் ஐந்து முக விளக்கை வைத்து அதில் விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் மும்முறை ஓம்! ஓம்! ஓம்! என்று கூறி மௌன விரதத்தை முடித்து விடலாம்.
பின்னர் அனைவரும் தங்களுடைய தேங்காய்களை மற்றவர்களுக்கு கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு முறை மாற்றும் பொழுதும் மேற்கூறிய மந்திரத்தை 5 முறை உச்சரிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தலா ஐந்து முறைக்கு 25 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து முடித்தவுடன் தம்முடைய தேங்காயை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் தேங்காய்களை உடைத்து தேங்காயை துருவி சர்க்கரை சேர்த்து பிரசாதமாக தானம் அளித்திட வேண்டும்.
தாங்களும் அந்த பிரசாதத்தை சிறிது உட்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அந்த தேங்காய் மூடிகளை துவரம் பருப்பினால் நிரப்பி ஏழை சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுத்திட வேண்டும். பின்னர் துர்கா தேவி மற்றும் லக்ஷ்மி தேவியிடம் பிரார்த்தனை மேற்கொண்டு விரத பலன்களை சமர்ப்பிக்கிறோம் என்று கூறிவிட்டு மீண்டும் இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தின் சக்தி காற்றோடு காற்றாக கலந்து உருபெற்று நம் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பதாக ஐதீகம் உள்ளது. இதன் மூலம் கணவனை பிரிந்தவர்கள், குடும்பத்தைப் பிரிந்தவர்கள், தீய வழியில் சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர்வதற்குரிய வரம் கிட்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக