ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

புதன், 7 செப்டம்பர், 2016

கேந்திராபத்திய தோஷம்.

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்ற முதுமொழியினை குறித்து நிற்பது இந்த தோஷமாகும்...
ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்பது 1,4,7,10 ஆகிய ஸ்தானங்களை குறிப்பதாகும். இந்த 1ம் பாவமானது ஆயுள் ஆரோக்கியம், குண அமைப்புகளையும்; 4ம் பாவமானது ஒருவருக்கு உண்டாகக் கூடிய சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, வீடு மனை யோகம், வண்டி வாகன யோகம் கல்வி, தாய்,தாய் வழி உறவுகளால் உண்டாக கூடிய பலன்கள் போன்றவற்றையம்; 7ம் பாவமானது ஒருவருக்கு உண்டாக கூடிய மண வாழ்க்கை, நட்பு கூட்டுத்தொழிலில் உண்டாக கூடிய பலன்களையும்; பெரும் கேந்திரமான 10ம் பாவமானது தொழில் வியாபாரம் உத்தியோகம் பற்றியும் கூறும். பொதுவாக கேந்திர ஸ்தானங்களில் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நற்பலன்கள் உண்டாகிறது என பார்க்கின்ற போது பாவ கிரகங்கள் அமைந்திருந்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படுகிறது. சுப பலனை தரக் கூடிய சுப கிரகங்களான குரு, புதன், சுக்கிரன்,சுபச்சந்திரன் (குறிப்பு :- வளர்பிறையில் எல்லா நிலைகளிலும் சந்திரன் சுபராக இருப்பதில்லை... இதுபற்றி முன்னரே ஒரு இட்டுள்ளேன்.) சுப கிரகங்களின் கேந்திர ஸ்தானங்களில் இருக்கும்போது நற்பலனை தருவதற்கு பதில் கேந்திராபத்திய தோஷத்தை ஏற்படுத்தி நற்பலன்கள் உண்டாகத் தடையை எதிர் கொள்ள நேரிடுகிறது. அதிலும் குறிப்பாக லக்கினம் தவிர தனது சொந்த கேந்திரவீட்டில் தனித்து ஆட்சிப் பெறும் போது அதன் திசா புக்தி காலங்களில் பல்வேறு வகையில் சோதனையான பலன்களை அடைய வேண்டியிருக்கிறது.
இயற்கை பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது மற்றும் அசுப சந்திரன், பாவருடன் இணைந்த புதன் கேந்திர ஸ்தானகளிற்கு அதிபதியாகி இன்னொரு கேந்திரஸ்தானத்தில் இருந்தால் கெடுபலன் தருவதில்லை.
கேந்திராதிபத்திய தோசத்தினை வலிமையாகவும் கடுமையானதாகவும் வழங்குவதில் முதலாமவர் குரு. அடுத்து புதன்.
லக்கினத்தில் கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகம் இருப்பது தோஷமில்லை. ஏனெனில் லக்கினம் முழுமையான கேந்திரம் இல்லை. அது கேந்திர திரிகோண ஸ்தானங்களினால் ஆக்கப்பட்டது.
இவை கேந்திராதிபத்திய தோஷம் பெற்று கேந்திரத்தில் தனித்து அமரும் போது கடுமையான தோசத்தினை வழங்கும்; இருப்பினும் பாவருடன் சேர்ந்து கேந்திரத்தில் அமரும் போது தமது தோச வலிமையினை குறைக்கும். கேந்திராதிபத்திய தோஷம் அடைந்த கிரகங்கள் தாம் இருக்கும் கேந்திர ஸ்தானத்தினை கெடுக்கும். அவற்றின் பலன்களை தாமதிக்கவோ அல்லது நிராகரிக்கவோ அல்லது அதில் பிரச்சினைகளையோ அல்லது அதில் குறைபாட்டினையோ வைத்துவிடும்.
தற்போது நாம் 12 லக்னங்களிற்கும் கேந்திர ஸ்தானம் எது எனவும் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த லக்னத்திற்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது என்பதனை தெளிவாக பார்ப்போம்.
மேஷ இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4ஆம் வீடான கடகமும் 7ஆம் வீடான துலாமும், மகரமும் கேந்திர ஸ்தானங்கள் ஆகும். கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்றிருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள் சொந்த வீடு வாகனம் அமையத் தடை, சுக போக வாழ்க்கைக்கு இடையூறுகள் உண்டாகிறது. அது போல 7ம் வீடான துலாத்தில் சுக்கிரன் ஆட்சிப் பெற்றிருந்தால் மண வாழ்க்கை விரைவில் அடையத் தடை அப்படி அமைந்தாலும் நிம்மதியில்லாத நிலை உண்டாகிறது. கூட்டு தொழிலில் பிரச்சனைகள் நல்ல நண்பர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. அதேபோல (சுப) சந்திரன் 7 இல் நிற்பதும், 10இல் நிற்பதும்; சுக்கிரன் 4இல் நிற்பதும், 10இல் நிற்பதும் கேந்திராதிபத்திய தோசத்தினை தரும்.

ரிஷப இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு எடுத்துக் கொண்டோமானால் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய வீடுகள் கேந்திர ஸ்தானங்களாகும். இந்த வீட்டு அதிபதிகளில் லக்னாதிபதி சுக்கிரன் மட்டுமே சுபராவார். அவர் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். இதனால் ரிஷப லக்னகாரர்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டாவதில்லை.
மிதுன இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,4 க்கு அதிபதியாக புதன் பகவானும் 7,10 இக்கு அதிபதியாக குரு பகவானும் உள்ளார்கள் . லக்னத்தில் புதன் ஆட்சிப் பெற்றால் லக்னாதிபதி என்பதால் நற்பலன்களையே உண்டாக்குவார். அதுவே 4ல் ஆட்சி உச்சம் பெற்றால் எதிலும் தடை தாமதங்கள், வீடு வாகனம் வாங்க தடை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாவதில் இடையூறுகள் உண்டாகும். அது போல 7 இல் குரு ஆட்சிப் பெற்றால் மண வாழ்க்கையில் பிரச்சனைகள். கூட்டு தொழிலில் சங்கடங்கள் ஏற்படுகிறது. 10இல் குரு ஆட்சிப் பெற்றாலும் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகி தொழில் உத்தியோக ரீதியாக தேவையற்ற பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடுகிறது-. புதன் ஏதாவது ஒரு பாவ கிரக சேர்க்கைப் பெற்றிருந்தால் நற்பலன் உண்டாகிறது. அதேபோல குரு / புதன் தனது எதிர் வீட்டில் இருப்பதும் தோசத்தினை தரும்.

கடக இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் 4 இல் ஆட்சி பெற்றால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாவதுடன் பாதகாதிபதி என்ற காரணத்தாலும் அளவு கடந்த சோதனைகளை சந்திக்க நேரிடுகிறது. சந்திரன் லக்ன கேந்திரம் பெறுவது தோஷம் என்றாலும் இலக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. சுக்கிரன் 7, 10 இல் இருப்பதும் கேந்திராதிபத்ய தோஷத்தினை தரும்.
சிம்ம இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10இல் சுக்கிரன் ஆட்சி பெறுவதால் தோஷம் உண்டாகி தொழில் உத்தியோக ரீதியாக பாதிப்புகளை அடைய நேரிடும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. சுக்கிரன் 4, 7 இல் இருப்பதும் கேந்திராதிபத்ய தோஷத்தினை தரும்.
கன்னி இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்றால் சிறுசிறு இடையூறுகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. 4இல் குரு ஆட்சி பெற்றால் சுக வாழ்வில் தடை வீடு வாகனம் வாங்க இடையூறுகள் உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். 7இல் குரு ஆட்சிப் பெற்றால் மணவாழ்வில் பிரச்சனைகள் கூட்டு தொழிலில் தடைகள் உண்டாகும். 10இல் புதன் ஆட்சிப் பெறுவது நல்லதல்ல என்றாலும் புதன் ஏதாவது ஒரு பாவ கிரக சேர்க்கை பெற்றிருந்தால் நற்பலன்களையே வழங்குவார். அதேபோல குரு / புதன் தனது எதிர் வீட்டில் இருப்பதும் தோசத்தினை தரும்.
துலா இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு இலக்னாதிபதி அதிபதி சுக்கிரனாவார். 10ஆம் அதிபதி சந்திரனாவார். சுக்கிரன் ஆட்சிப் பெற்றால் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். சுப சந்திரன் ஆட்சி பெற்றால் தேவையற்ற மனக்குழப்பங்கள் தொழில் வியாபார ரீதியாக இடையூறுகள் உண்டாகும். அதுவே அசுப சந்திரனாக இருந்து விட்டால் நற்பலன்களே உண்டாகும். அதேபோல அசுப சந்திரன் 4, 7இல் இருப்பதும் தோசத்தினை தரும்.
விருச்சிக இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ஆம் அதிபதி சுக்கிரன் மட்டுமே சுப கிரகமாவார். சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் ஆட்சிப் பெற்றால் மண வாழ்வில் தேவையற்ற பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடும் அது மட்டுமின்றி காரகோ பாவ நாச ரீதியாகவும் களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் ஆட்சிப் பெறுவது நல்லதல்ல. இதனால் திருமண நடை பெற தடை தாமதங்களும் உண்டாகும். தாமதித்து திருமணம் அமையும் அதன் பின்னர் நற்பலன் உண்டாகும். அதேபோல சுக்கிரன் 4, 10 இல் இருப்பதும் தோசத்தினை தரும்.

தனுசு இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,4 இக்கு அதிபதியாக குருவும் 7,10 இக்கு அதிபதியாக புதனும் உள்ளனர். கேந்திர ஸ்தானங்கள் அனைத்தும் சுபர் வீடாக இருப்பதால் கேந்திராதிபத்ய தோஷத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. 1இல் குரு ஆட்சி பெறுவது தோஷம் என்றாலும் இலக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. அதுவே 4இல் ஆட்சிப் பெற்றால் சுகவாழ்வில் பாதிப்பு, வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்குவதில் தடைகள், கல்வியில் இடையூறுகள் உண்டாகும். 7,10இல் புதன் ஆட்சிப் பெற்றால் மண வாழ்க்கையில் இடையூறுகள், திருமணம் நடைபெற தடைகள், தொழில் வியாபார உத்தியோகரீதியாக வீண் சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்றாலும் புதன் பாவ கிரக சேர்க்கையுடனிருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. அதேபோல குரு / புதன் தனது எதிர் வீட்டில் இருப்பதும் தோசத்தினை தரும்.
மகர இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுப கிரக சுக்கிரன் 10 இல் ஆட்சிப் பெற்றால் தொழில் வியாபார ரீதியாக வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றாலும் அவர் திரிகோண ஸ்தானமான 5 க்கும் அதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை ஏற்படுத்த மாட்டார். சந்திரன் 7ஆம் அதிபதி என்பதால் ஆட்சிப் பெற்று அமைந்து விட்டால் மனக்குழப்பம், மண வாழ்க்கை ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும் அசுப சந்திரனாக இருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. அதேபோல அசுப சந்திரன், சுக்கிரன் 4, 7, 10 இல் இருப்பதும் தோசத்தினை தரும்.
கும்ப இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4 ஆம் அதிபதி சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமைந்தால் கேந்திராதிபத்திய தோஷம் உண்டாகி சுக வாழ்வு உண்டாக தடை, இல்வாழ்வில் பிரச்சனை, பெண்களால் இடைஞ்சல்கள் உறவினர்களால் வீண் மனக்கவலைகள் உண்டாகும். அதேபோல சுக்கிரன் 7, 10 இல் இருப்பதும் தோசத்தினை தரும்.
மீன இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,4,7,10 ஆம் அதிபதிகள் சுபர்கள் என்பதால் 1இல் குரு ஆட்சிப் பெற்றால் சிறிது தோஷம் என்றாலும் இலக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. அதுவே 10இல் ஆட்சிப் பெற்றால் தொழில் உத்தியோக ரீதியாக இடையூறுகள் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும். 4,7ல் புதன் ஆட்சிப் பெற்றால் சுக வாழ்வு உண்டாவதில் தடை வீடு வாகனம் அமைவதில் தடை உண்டாகும். மண வாழ்க்கை அமைவதிலும் தாமதம் ஏற்படும். இல்வாழ்க்கை ரீதியாகவும் நிறைய பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடும். அதுவே புதன் பாவ கிரக சேர்க்கையுடனிருந்தால் ஒரளவுக்கு கெடு பலன் குறைகிறது-. குறிப்பாக அந்தந்த கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் தான் பாதிப்புகள் அதிகமாகிறது. ஜென்ம இலக்னம் கேந்திர ஸ்தானம் என்றாலும் இலக்னாதிபதியாக இருந்து ஆட்சிப் பெற்றால் பெரிய கெடுதல்களை ஏற்படாது. அதேபோல குரு / புதன் தனது எதிர் வீட்டில் இருப்பதும் தோசத்தினை தரும்.
நன்றி,
வணக்கம்.

GHT

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

4 கருத்துகள்:

Guna Pollachi சொன்னது…

எனக்கு தனுசு லக்கினம் புதன் லக்கினத்தில் உடன் மாந்தி சனி மற்றும் செவ்வாய் பார்வை உண்டு.

Guna Pollachi சொன்னது…

எனக்கு தனுசு லக்கினம் புதன் லக்கினத்தில் உடன் மாந்தி சனி மற்றும் செவ்வாய் பார்வை உண்டு.

R Krishna சொன்னது…

தோஷ பரிகாரம் என்ன?

Unknown சொன்னது…

My son is born in kadaga lagnam and sukkiran in 10th house...

please tell pariharam

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.