ஒரு வருடத்தில் 12 அமாவாசை வந்தாலும் தை அமாவாசை சிறப்பு மிக்கதொன்று...
ஆயுள் காரகன் சனியின் மகரத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தில் ஜோதி மகரஜோதி என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது.. மகர ராசியில் சந்திரனும் சூரியனுடன் இணையும் சிறப்பான நாளே தைஅமாவாசை. இக்காலத்தில் நாம் ஆற்றும் புண்ணிய பலன்கள் தீராத நம் பிரச்சினைகள், நோய்நொடி, வம்பு வழக்குகளை தீர்த்து வைக்குமென நமது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தை மாதத்தில் வேறென்ன புண்ணியகாரியங்களெல்லாம் செய்யலாம்? சந்திரனின் அம்சமான வெல்லமும் பச்சரிசியும் தேன் ,நெய்யுடன் மாவிளக்கு இடுவது சிறப்பான பலனை தரும். அன்னதானம் செய்வதும் சுமங்கலிகளின் ஆசி பெறுவது சிறப்பான புண்ணிய பலனை தரும். இந்த தைஅமாவாசை கடலில் தீர்த்தமாட முடிந்தால் சென்று தீர்த்தமாடி வாருங்கள். ருணரோகங்கள் தீரும்.
தை அமாவாசை அன்று பித்ருகளுக்கு தர்பணம் கொடுத்தால், ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். குழந்தைகளை வளர்த்த பெற்றோர், அவர்களின் காலம் முடிந்து இறைவனடி சென்ற பிறகு, அவர்களுக்கு திதி தருவது, பிண்டம் தருவது, வழிபாடு செய்து வருவது போன்ற அவர்களுக்குரிய மரியாதையை சரியாக தந்தாக வேண்டும். அதைதான் பித்ரு கடன் என்கிறது சாஸ்திரம். இந்த கடனை அடைக்காத பிள்ளைகளின் வாழ்க்கை கலங்கும். இதனால் பித்ரு கடன் பட்ட பிள்ளைகளின் நெஞ்சமும் ஏதாவது ஒரு விஷயத்தில் கலங்கும்படி ஆகும். அதனால் கண்டிப்பாக பித்ரு கடனை நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால்தான் நன்மைகள் வரும் என்று சிவபெருமானே ஸ்ரீஇராமரிடம் கூறி இருக்கிறார்.
தை அமாவாசை அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜர், அனுமதி தருவார். அதனால் யம காவலர்கள், பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அங்கிருந்து சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு பித்ருக்களை அழைத்து வருவார்கள்.
பித்ருக்களை அவரவர் இல்லத்திற்கு செல்ல அனுமதிப்பார்கள் யமதர்மராஜாவின் காவலர்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்கள். அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்பணம் தர வேண்டும். நாம் தரும் பிண்டமும், தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு. தை அமாவாசை நேரம் முடிந்த உடனே, யம தேவரின் காவலர்கள் மீண்டும் பித்ருக்களை அழைத்துக்கொண்டு யமலோகம் செல்வர். பித்ருக்களின் சாபம்பட்ட குடும்பத்தில்தான் துர் சம்பவங்கள் நடக்கும். தெய்வம் கூட கருனை காட்டாது – உதவி செய்யாது என்கிறது கருட புராணம். நாம் தரும் பிண்டம்தான் ஆத்ம ரூபமாக உள்ள முன்னோர்களின் பசியை தீர்க்கும் உணவாகும்.
விசேஷமான தை அமாவாசையில் பித்ருக்களின் பசியை போக்கி அவர்களின் ஆசியையும், இறைவனின் அருளையும் பெற்று சுபிக்ஷங்களை தடையின்றி பெறுவோம்.!
"தர்மம் தலைகாக்கும். தானம் விதிமாற்றும் "
1 கருத்துகள்:
மிகவும் அருமை அய்யா. நன்றி
கருத்துரையிடுக