ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

ஞாயிறு, 9 ஜூலை, 2017

ரிஷி பஞ்சமி

நாம் சூரியனை வணங்குகிறோம், சூரியன் யாரை வழிபடுகிறார் தெரியுமா?
சூரியன் இல்லையேல் இவ்வுலகம் இல்லை. பிரபஞ்சமே சூரியனின் கொடையால்தான் இயங்குகிறது. மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளையும் சூரியனே வழங்குகிறார். அதனால்தான் காலை நீராடிய உடனே சூரியனை வழிபடுகின்றோம். நம்முடைய நன்மைக்காக நாம் சூரியபகவானை வழிபடுகிறோம். ஆனால், நமக்கெல்லாம் நன்மை தருவதற்காக சூரியபகவான் தினமும் யாரை வழிபடுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சூரியன்
வான மண்டலத்தில் இருக்கும் சப்த ரிஷிகளைத்தான் சூரியபகவான் வழிபடுகிறார். விண்ணில் ஏழு ரிஷிகளும் சப்தரிஷி மண்டலமாக நட்சத்திர வடிவத்தில் காட்சி தருகின்றனர்.
காஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கௌதமர், பிருகு, வசிஷ்டர் ஆகிய இந்த எழுவர்தான் சப்தரிஷிகள். இவர்களைப் பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
காஸ்யப மகரிஷி:
காஸ்யபர் சப்த ரிஷிகளுள் ஒருவராவார். இவர் மரீசி முனிவரின் புதல்வர் ஆவார். தேவர் குலம், அசுரகுலம் ஆகிய இரண்டும் இவரிடமிருந்தே தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இவரிடம் இருந்து தோன்றிய மனுவில் இருந்து தோன்றியதே 'மனிதகுலம்' என்றும் நம்பப்படுகிறது. இவர் தட்சனின் 13 குமாரிகளையும். விநதை, கத்துரு, பதங்கி, யாமினி ஆகிய நால்வரையும் மணந்ததாகச் சொல்லப்படுகிறது. உலகிற்குத் தேவையான அன்பு, அமைதி, பொறுமை ஆகிய நற்குணங்களைப் போதித்தவர். இவரின் போதனையால்தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் செழிப்போடு இருக்கிறது. அதனால் இந்தப் பிரபஞ்சம் 'காசினி' என்றும் அழைக்கப்படுகிறது.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் சர்வ சாஸ்த்ரார்த்ததாய வித்மஹே
ஆத்ம யோகாய தீமஹி
தந்நோ காஸ்யப ப்ரசோதயாத்'
அத்ரி மகரிஷி:
இவர் படைப்புக் கடவுளான பிரம்மனின் மகனாவார். பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் சொல்லப்படுகிறது. இவரின் மனைவியின்அத்ரி மகரிஷியின் மகன் தத்தாத்ரேயர் பெயர் அனசுயா தேவி. அனசூயா தேவிதான் தன் கற்பின் திறத்தால் மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றினாள். அந்த மூன்று குழந்தைகளின் இணைந்த வடிவமே 'தத்தாத்ரேயர்'. மருத்துவத்தில் சிறந்தோங்கிய ஆத்ரேயரும் அத்ரி மகரிஷியிடம் இருந்து தோன்றியவரே. ரிக் வேதத்தை தொகுத்ததில் இவரின் புதல்வர்களுக்கு பெரும்பங்கு உண்டு. ரிக் வேதம், புதுமணத் தம்பதிகளை வாழ்த்தும்போது, 'அத்ரி- அனசூயைப் போல வாழ வேண்டும்' என்றுதான் வாழ்த்தவேண்டும் என்று கூறுகிறது. சுக்ரீவனுக்கு அடைக்கலம் கொடுத்து வாலியிடமிருந்து காப்பாற்றியவர் அத்ரி மகரிஷியே. இவரிடம் இருந்துதான் சந்திரனும் தோன்றினார்.
நெல்லை மாவட்டத்தில், ஆழ்வார்குறிச்சியில் கடனா நதி அருகே உள்ள அத்ரி மலையில் இவரது கோயில் உள்ளது. அங்கே ஶ்ரீ அனசுயாதேவியுடன் அத்ரி மகரிஷி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் சத்கர்மபலதாய வித்மஹே
சதாக்நிஹோத்ராய தீமஹி
தந்நோ அத்ரி ப்ரசோதயாத்'
பரத்வாஜர்:

பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர் பரத்வாஜர். தனது மூன்று ஆயுள்களையும் வேதம் பயில்வதற்கே பயன்படுத்தியவர். ரிக்வேதத்தில் அதிக சூக்தங்கள் இயற்றியவரும் இவரே ஆவார். இவரின் தவ வலிமையைப் போற்றாத புராணங்களே இல்லை. வேதங்களைப் போன்றே மருத்துவ ஆய்விலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்தவர். இவர் பல்வேறு மந்திரங்களையும் உருவாக்கியுள்ளார். மகாபாரதத்தில் வரும் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் குருவான துரோணாச்சாரியார் பரத்வாஜ மரிஷியின் புதல்வரே ஆவார்.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் தபோரூடாய வித்மஹே
சத்ய தர்மாய தீமஹி
தந்நோ பரத்வாஜ ப்ரசோதயாத்'
விஸ்வாமித்திரர்:
விஸ்வாமித்திரர் என்று சொன்னால் உலகுக்கு உற்ற நண்பன் என்று பொருள். இன்றளவும் முனிவர் என்று சொன்னவுடனே நம் நினைவுக்கு வருபவர் விசுவாமித்திரர்தான். அந்த அளவுக்கு விசுவாமித்திரரின் கோபம் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். இவர் குசநாபரின் மகனாவார். ரிக் வேதத்தில் பல பகுதிகள் இவரால் எழுதப்பட்டதே. காயத்ரி மந்திரம் கூட இவர் உருவாக்கியதே.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜயாபதி என்னும் இடத்தில் இவருக்குத் தனிக்கோயில் உள்ளது.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜுடாய தீமஹி
தந்நோ விஸ்வாமித்ர ப்ரசோதயாத்'
விஸ்வாமித்திரர்
கௌதமர்:
வேதகால ரிஷிகளுள் இவரும் ஒருவராவார். இன்றளவும் போற்றப்படும் 'தர்மசூத்திரம்' இவரால் இயற்றப்பட்டதே. ரிக் வேதத்தில் இவரது பெயரில் பல்வேறு மந்திரங்கள் உள்ளன. இவரது மனைவியின் பெயர் அகலிகை. அவருக்கு வாமதேவர், நோதாஸ், ஷதானந்தா என்ற புதல்வர்களும் உண்டு.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் மஹாயோகாய வித்மஹே
சர்வபாவநாய தீமஹி
தந்நோ கௌதம ப்ரசோதயாத்'
பிருகு:
இவர் பிரம்மதேவனால், தன் படைப்புத் தொழிலுக்கு உதவி புரிவதற்காக உருவாக்கப்பட்டவர். ஜோதிட சாஸ்திரத்தின் முதல் நூலான 'பிருகு சம்ஹிதா' இவரால் எழுதப்பட்டதே. இவர் மனைவியின் பெயர் கியாதி. இவருக்கு விததா, ததா, சுக்ரன் என்ற மகன்களும், ஶ்ரீ என்ற மகளும் உண்டு. உலகில் அறத்தைக் காக்கவேண்டும் என்பது இவரின் உன்னத நோக்கமாகும்.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
அக்ஷசூத்ராய தீமஹி
தந்நோ பிருகு ப்ரசோதயாத்'
வசிஷ்டர்:
வேதகாலத்தில் வாழ்ந்த மாமுனிகளில் இவரும் ஒருவர். மிகச் சிறப்பானவற்றையே பாராட்டும் குணம் கொண்டவர். எனவே, இவரிடம் பாராட்டு பெறுவது சிறப்பானது. வசிஷ்ட முனிவரின் மனைவிதான் அருந்ததி . இவர் பெண்களுக்கு அதிகமாக மதிப்பளிப்பவர் . இதைப் போற்றுவதற்காகவே '
ரிஷி பஞ்சமி' வழிபாடு பெண்களால் மேற்கொள்ளப்படுகிறது. இவர் ராமாயணத்தில் தசரதனுக்கு அரச குருவாக விளங்கியவர். அனைத்துப் புராணங்களிலும் இவர் போற்றப்படுகிறார்.

'ரிஷி'கள் என்பவர்கள், 'மந்திர த்ரஷ்டா' அதாவது, நாம்  ஜபிக்கும் மந்திரங்களை பிரத்யக்ஷமாகக் கண்டுணர்ந்து நமக்குக் கொடுத்தவர்கள். அவர்களது மகிமை அளவிடற்கரியது.

நாம் நல்வாழ்வு காண உதவும் மந்திரங்கள், ரிஷிகள் நமக்கு அளித்த அருட்கொடை. அவர்கள் தம் தபோவலிமையால் நமக்கு அளித்த மந்திரங்களின் சக்தியால், வாழ்வில் ஏற்படும் இன்னல்களை நாம் வெற்றி கொள்ளலாம். விச்வாமித்ர மஹரிஷி நமக்கு அளித்த 'காயத்ரி  மந்திரம்' ஒன்றே மந்திரங்களின் சக்தியை விளக்கப் போதுமானது.

விநாயக சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதி 'ரிஷி பஞ்சமி' என்றே போற்றப்படுகிறது. அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபடுகிறவர்கள் வாழ்வில் நலம் பல பெருகும் என்பது திண்ணம். ரிஷிகள் அநேகம் இருந்தாலும் சப்த ரிஷிகள், ரிஷிகளில் சிறப்பு வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.இவர்கள், காசியில், சிவபெருமானை வேண்டித் தவமிருந்து நட்சத்திரப் பதவி பெற்று, வான மண்டலத்தில் சப்த ரிஷி  மண்டலமாகக் கொலுவிருக்கிறார்கள்.வானமண்டலத்தில் சனிபகவான் உலகத்திற்கு வடக்கே சப்தரிஷி மண்டலம் உள்ளது. அங்கிருந்து வந்து தினமும் காசி விஸ்வநாதரை சப்த ரிஷிகளும் பூஜிப்பதாக ஐதீகம். இதனை குறிக்கும் விதத்தில், இரவில், காசி விஸ்வநாதரின் கருவறையில் ஏழு பண்டாக்கள்(பூஜகர்கள்) சூழ்ந்து நின்று பூஜை நடத்துவர். இது 'சப்த ரிஷி பூஜை' என்றே சிறப்பிக்கப்படுகிறது. காசி விஸ்வநாதரின் ஆலயத்தில் மிகச் சிறப்பு வாய்ந்த பூஜை ஆகும் இது.

துருவ நட்சத்திரத்திற்கு அடுத்தபடியாக, வான மண்டலத்தில் முக்கியத்துவம் பெறுவது சப்த ரிஷி மண்டலமே, இதன் சுழற்சியை வைத்தே, இரவில் நேரம் கணித்து வந்தனர் நமது முன்னோர்.

திருமணங்களில், மிக முக்கியமான சடங்கு, 'அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது'. அம்மிக் கல், வீடுகளில் அக்காலத்தில் சமையலுக்கு உதவும் உபகரணங்களில் ஒன்று. அதை, திருமண வேளையில், மணப்பெண், மிதிப்பதன் பொருள், எத்தகைய சோதனைகள் இல்வாழ்வில் ஏற்பட்டாலும், பெண்ணானவள், மன உறுதியோடு அதை எதிர்கொள்ள வேண்டும். மேலும், குடும்பத்திற்கு புதிதாக வருகிற பெண்ணின் கையிலேயே, குடும்ப கௌரவம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த கௌரவத்தை, அம்மிக்கல் எப்படி, வளையாது நெளியாது நேராக இருக்கிறதோ, அதைப்போல், வளையாமல் காக்க வேணும் என்பதும் இதன் பொருள்.

அந்த வேளையில் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்ப்பது ஐதீகம். அருந்ததி, வசிஷ்டரின் தர்மபத்தினி. சப்த ரிஷி மண்டலத்தில், வசிஷ்ட நட்சத்திரத்தின் அருகிலேயே, மிகச் சிறிய அளவில் அருந்ததி நட்சத்திரத்தைக் காணலாம். அது போல் தம்பதிகள் பிரியாது ஒற்றுமையாக இருக்க வேண்டும். உண்மையில் அருந்ததி ஒரு இரட்டை நட்சத்திரம். பார்க்க ஒன்று போல் தெரியும். அதைப் போல் தம்பதிகள் உடலால் வேறு பட்டவர்களாயினும் உள்ளத்தால் ஒன்றாக இருக்க வேண்டும்.
ரிஷி பஞ்சமி விரதத்துக்கான பூஜா விதிகளில், சப்த ரிஷிகளின் பெயர்கள், ஸ்ரீகாஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், கௌதமர், ஜமதக்னி என்றே குறிப்பிடப்படுகின்றன. வெவ்வேறு புராணங்களில் வெவ்வேறு விதமாகக் குறிக்கப்பட்டாலும், ரிஷிகளின் மகத்துவம் ஒன்றே.

ரிஷி பஞ்சமி விரதம் பெண்களால் செய்யப்படுவது. மிக முற்காலத்தில், ஏற்பட்ட ஆசார விதிகளின் நோக்கம் சுகாதாரம் பேணி நம் ஆரோக்கியத்திற்கு வழி வகுப்பதேயாகும். மாத விலக்கு நாட்களில், பெண்களின் உடல் இயல்பாகவே பலவீனப்படுவதால், நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.  அந்நாட்களில் இப்போது இருப்பதைப் போல் நவீன வசதிகள் ஏதும் இல்லை. எனவே, அந்த நாட்களில், மற்றவரோடு கலந்து  அவர்கள் இருக்கும் போது, அவர்கள் நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதற்கும், அது அவர்கள் மூலமாக மற்றவருக்குப் பரவுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே, அந்த நாட்களில் அவர்களைத் தனிமைப்படுத்தி, வேலை எதையும் செய்ய விடாது செய்திருந்தனர் நமது முன்னோர்.
தவறிப்போய் அவர்களால், இவ்விதிகளுக்கு ஏதேனும் பாதகம் ஏற்படுமாயின், அதை நிவர்த்தித்துக் கொள்ளவே இந்த விரதம் செய்யப்படுகிறது. 'ரிஷி பஞ்சமி' விரதத்தின் மூலம் நாம் வேண்டும் வரங்களைப் பெற்று மகிழ முடியுமாயினும், மிக முக்கியமாக, இந்தக் காரணத்திற்காகவும், பெண்களின் சௌபாக்கியம் அதிகரிக்க வேண்டியும் இந்த விரதம் செய்யப்படுகிறது. மிக வயது முதிர்ந்த பெண்களே, இந்த விரதத்தைச் செய்வது வழக்கம்.
இந்த விரத பூஜைக்கு முன்பாக, 'யமுனா பூஜையைச்' செய்ய வேண்டும். இது பஞ்சமியன்று மதியம் செய்யப்படுவது. இதைச் செய்வதற்கு முன்பாக, வேதம் ஓதிய வைதீகர்களை வைத்து முறைப்படி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பின் வஸ்திர(புடவை) தானம் செய்ய வேண்டும். இந்த விரதத்தை சுமங்கலிகள் எடுத்தால் சிவப்பு நிறப்புடவை தானம் செய்வார்கள். சுமங்கலிகள் அல்லாதார் எடுத்தால் ஒன்பது கஜ வெள்ளைப் புடவையில், மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து தெளித்து விட்டுத் தானம் செய்வார்கள். 

அதன் பின்,'நாயுருவி' செடியின், 108 குச்சிகளால் பல்துலக்கி ஸ்நானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை பல்துலக்கிய பிறகும் குளிப்பது அவசியம்.

பல் துலக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
ஆயுர் பலம் யசோ' வர்ச்ச: ப்ரஜா: பசு' வஸூநி ச|
ப்ரஹ்ம ப்ரஜாம் ச மேதாஞ்ச தன்நோ தேஹி வனஸ்பதே||

பிறகு,சிவப்பு நிற ஆடை அணிந்து, பஞ்ச கவ்யம் (பசு மாட்டிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணம், கோமயம்  இவை சேர்ந்தது தான் பஞ்ச கவ்யம். இதில் சிறிதளவு எடுத்து, மந்திரங்களைச் சொல்லி உட்கொள்ளும் போது நமது உடலும் ஆன்மாவும் தூய்மை அடைகின்றன.) சாப்பிடவேண்டும். பிறகு முறைப்படி விக்னேஸ்வர பூஜையைச் செய்து, அரிசிமாவில் எட்டு இதழ் கமலத்தை வரைந்து, அதன் மேல் கலசத்தை வைத்து நெய் விளக்கேற்றி பூஜிக்க வேண்டும். கலசத்தில் யமுனை நதியின் நீரையே வைத்துப் பூஜிப்பது சிறந்தது.

மாலையில் ரிஷி பஞ்சமி பூஜையைச் செய்ய வேண்டும். விரதம் எடுத்து அன்றே முடிக்க வேண்டுமாயின், காலையிலேயே யமுனா பூஜை முடிந்த பின், விரத பூஜையைச் சேர்த்துச் செய்வது வழக்கத்தில் இருக்கிறது. சாஸ்திரப்படி, எட்டு வருடங்கள் (ஒவ்வொரு வருடமும் ரிஷி பஞ்சமி தினத்தன்று)  பூஜை செய்த பின்பே விரதத்தை முடிக்க வேண்டும். ஆனால் இப்போது, விரதம் எடுத்த அன்றே முடிப்பது வழக்கத்திலிருக்கிறது. சிலர் எட்டு வருடங்களில் ஏதாவது ஒரு வருடத்தில் முடித்து விடுகிறார்கள்.
யமுனா பூஜைக்கு உபயோகித்த கலசத்தை வைத்தே ரிஷி பஞ்சமி பூஜையைச் செய்யலாம். அதன் பின், எட்டு முறங்களில் வாயனங்கள் வைத்து தானம் செய்ய வேண்டும்.
வாயனங்கள்:
அதிரசம், வடை, எள் உருண்டை, இட்லி, கொழுக்கட்டை, இயன்ற பழங்கள், வெற்றிலை பாக்கு தாம்பூலம், தேங்காய், தட்சணை முதலியவற்றை வைக்க வேண்டும்.
ஏழு முறங்களில் இவ்வாறு வைத்து விட்டு, எட்டாவது முறத்தில், வாயனங்களோடு,   ஒரு பெட்டியில், ரவிக்கைத் துண்டு, சீப்பு, கண்ணாடி, மஞ்சள், குங்குமம், வளையல், பூ ஆகியவற்றையும் வைக்க வேண்டும். வைக்கும் பெட்டி மஞ்சள் நிறத்தில் இருப்பது நல்லது. ஏழு முறங்களும் சப்த ரிஷிகளை உத்தேசித்தும் எட்டாவது முறம்(வாயனங்களோடு பெட்டியும் இருப்பது) அருந்ததியை உத்தேசித்தும் தானம் செய்யப்படுகிறது.

முறத்தில் வைக்கும்  பொருட்கள்  ஒவ்வொரு ஊர் வழக்கத்தை ஒட்டி மாறுபடும். மதுரைப் பகுதியில், எட்டு விதப் பழங்கள், எட்டு வித இனிப்புகள் ஆகியவை வடை, எள் உருண்டையோடு வைக்க வேண்டும்.மற்ற பகுதிகளில் மேற்சொன்ன விதத்தில் வைக்கிறார்கள். எட்டு வருடங்கள் பூஜை செய்வதானால், முதல் வருடம் அதிரசம் கட்டாயம் செய்ய வேண்டும். மற்ற வருடங்கள் சௌகரியப்பட்டதை செய்யலாம்.

விரதம் எடுத்தவர்கள் பால், பழங்கள் ஆகியவற்றையே அன்றைய தினம் உணவாக உட்கொள்ள வேண்டும்.
விரதத்தை முடிப்பதானால்:
ரிஷி பஞ்சமி தினத்தன்று, விரதத்தை முடிப்பதாக இருந்தால், சங்கல்ப ஸ்நானத்திற்குப் பின், விரதம் எடுத்து தானங்கள் செய்த பிறகு கலச ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

இதற்கு, எட்டு கலசங்கள் தேவை. அதில் வைக்க, வெள்ளித் தகட்டாலான‌, பிரதிமைகள் எட்டு, வஸ்திர‌ங்கள் எட்டு, தானம் செய்வதற்குத் தேவையானவை ஆகியவற்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிரதான கலசத்திற்கு மட்டும் ஒரு வேஷ்டியும் துண்டும் கட்டி, மற்றவற்றிற்கு சிறிய வஸ்திரங்களைக் கட்டலாம். அவரவர் வசதியைப் பொறுத்துச் செய்து கொள்ளலாம். சௌகரியப்பட்டவர்கள், கலசத்திற்குள், தங்கள் வசதிக்கேற்றவாறு தட்சணைகள் போடலாம்.

தானம் செய்ய வேண்டியவை:
இந்த விரதம் மிகச் சிறப்பு வாய்ந்த பெரிய விரதமாகும். ஆகவே, இதற்கு பத்து வித(தச) தானங்கள் செய்யவேண்டும். தானங்கள் செய்வதன் நோக்கம், அறிந்தும் அறியாமலும், நம் வாழ்விலும், விரதங்களைக் கைக்கொள்ளும் முறையிலும், நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டியே.

1.கோதானம் (பசு அல்லது தேங்காய்),
2.பூதானம் (நிலம் அல்லது சந்தனக்கட்டை.) சக்தியுள்ளவர்கள், பசு, நிலம் முதலியவை கொடுக்கலாம். இல்லாதவர்கள், தேங்காய் அல்லது சந்தனக் கட்டையைச் சற்று கூடுதலான தக்ஷிணையுடன் தானம் செய்யலாம். நமது சாஸ்திர‌ விதிகளில், அவரவர் வசதியைப் பொறுத்து தானம் செய்ய வழி செய்யப்பட்டுள்ள‌து.  பலன் வேண்டும் என்பதற்காக, ந‌ம் சக்திக்கு மீறிச் செய்வது, கடன் வாங்குவது போன்ற வேண்டாத பழக்கங்களுக்கு வழி வகுக்கும்.  நமது சாஸ்திரங்களுக்கு இதில் உடன்பாடே இல்லை.
3. திலதானம்(எள்),
4.ஹிரண்யம்(பொன்னாலான நாணயம்),
5.வெள்ளி நாணயம்,
6.நெய்,
7.வஸ்திரம்,
8.நெல்,
9.வெல்லம்,
10.உப்பு ஆகியன.

ஒவ்வொன்றையும் ஒரு பாத்திரம் அல்லது தட்டில் வைத்துத் தானம் செய்யலாம். இயலாதவர்கள் தொன்னையில் வைத்துக் கொடுக்கலாம். இவ்விதம் தச தானம் செய்ய இயலாதவர்கள், பஞ்ச தானம் செய்யலாம். அவை,வஸ்திரம், தீபம், உதகும்பம், மணி, புத்தகம் ஆகியன.

விரத தினத்துக்கு மறு நாள் தான் தானங்கள் செய்வது வழக்கம். அன்று தம்பதி பூஜையும் விசேஷமாகச் செய்வது வழக்கம். 

தம்பதி பூஜைக்குத் தேவையானவை:
புடவை, ரவிக்கைத் துணி, வேஷ்டி, அங்கவஸ்திரம், திருமாங்கல்யம், மெட்டி, இவை வைக்கத் தட்டு அல்லது ட்ரேக்கள் ஆகியவை தேவை. தாம்பாளமும் வாங்கலாம். புடவை வேஷ்டி, அவரவர் வசதிப்படி, கறுப்பு நூல் கலக்காததாக,  பட்டுப் புடவை, வேஷ்டியோ (கறுப்பு, அல்லது கருநீலக்கரை வேஷ்டியில் கறுப்பு நூல் கலந்திருக்கும் வாய்ப்பு உண்டு), அல்லது நூல் புடவை வேஷ்டியோ வாங்கலாம். இரண்டு மாலைகளும் வாங்க வேண்டும்.

கலச ஸ்தாபனம் செய்த பிறகு, கலசங்களுக்கு, நான்கு கால பூஜைகள் செய்ய வேண்டும். 
சப்த ரிஷிகளைப் பூஜிக்க உதவும் 'சப்தரிஷி அஷ்டோத்திர'த்திற்கு இங்கு சொடுக்கவும்.

ஒவ்வொரு கால பூஜைக்கும், தனித்தனியாக, பிரத்தியேகமான நிவேதனங்கள் செய்ய வேண்டுவது அவசியம். வடை, பாயசம், மஹா நைவேத்தியம், இட்லி, கொழுக்கட்டை போல் வசதிப்படும் எதையும்  நிவேதனமாக வைக்கலாம்.

இந்த பூஜை நிவேதனங்களை ஒரு தட்டில் வைத்து, நான்கு வைதீகர்களுக்கு தானம் செய்வது நல்லது. மேலும், நான்கு கால பூஜைகள் நிறைவடைந்த பிறகு, அன்றைய தினம் இரவில், எட்டு கலசங்களையும் தானமாகப் பெறவிருக்கும் வைதீகர்களுக்கு, உணவு(பலகாரம்) அளிப்பது முக்கியம்.

பூஜைகள் முடிந்ததும், மறு நாள் புனர் பூஜை செய்ய வேண்டும்.

புனர் பூஜை:
மறு நாள், சுருக்கமாகக் கலசங்களுக்கு தூப தீபம் காட்டி, இயன்றதை நிவேதித்து புனர் பூஜை செய்த பின்,  விரதம் முடிப்போர், கலசங்களில் இருக்கும் நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.

பின் கலசங்களைத் தானம் செய்ய வேண்டும். பின் தச தானம் முதலியவற்றைச் செய்ய வேண்டும்.

தம்பதி பூஜைக்கு அமர்கிறவர்கள், வயது முதிர்ந்த தம்பதிகளாக இருந்தால் விசேஷம். அவர்களை பார்வதி பரமேஸ்வரனாகப் பாவித்து, மிகுந்த பக்தியுடன், உபசார பூஜைகளைச் செய்ய வேண்டும். அவர்கள், மாலை மாற்றி, திருமாங்கல்ய தாரணம் செய்த பின், ஆரத்தி எடுத்து, அவர்களை நமஸ்கரிக்க வேண்டும்.

அதன் பின், பூஜையில் பங்கு கொண்டவர்கள், வந்திருக்கும் விருந்தினர்கள் அனைவருக்கும் உணவு வழங்கிய பின், விரதம் எடுத்தவர்கள்  சாப்பிடலாம். பலகாரமாக (டிபன்) சாப்பிடுவது வழக்கம்.

பொதுவாக விரதங்களின் நோக்கம், எவ்விதத்திலாவது இறைவழிபாட்டில்  மனதை ஈடுபடுத்தி, வாழ்வின் நோக்கம் ஈடேறப் பெறுவதேயாகும். தானங்கள் செய்யும் போது வசதிக்கேற்றவாறு கொடுக்கும் மனப்பான்மை வளருகிறது. தானங்களில் சிறந்ததான அன்ன தானம் செய்யும் பொழுது நமது பாவங்கள் மறைகின்றன. லௌகீகமாகப் பார்க்கும் பொழுது, நம் உறவும் நட்பும் விரத பூஜை தினத்தில் நம் வீட்டுக்கு வந்து, நம்மோடு சேர்ந்து பூஜைகளில் கலந்து கொள்ளும் போது, அவர்களுக்கும் இறையருள் கிடைக்கப்பெற்று, அதன் பலனாக, அவர்கள் வாழ்வில் வளம் சேருகிறது. நம் உறவுகளும் பலமடைகின்றன.

இந்த விரதம் இப்போது நடைமுறையில் அருகி வருகிறது. ஆனாலும் இவ்விரதம் பற்றிய செய்திகளைப் பதிவு செய்ய  வேண்டுமெனக் கருதியே இதைப் பதிவிட்டேன்.

இவ்விரத பூஜையைச் செய்ய இயலாதோரும், சப்தரிஷிகளை இந்நன்னாளில் வேண்டி வணங்கி நலம் பல பெறலாம். 

வெற்றி பெறுவோம்!!!!!

GHT

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.